’இதனால் தான் அவர் ஸ்பெசல் பிளேயர்..’ காயத்துடன் அணிக்காக களமிறங்கிய ரிஷப் பண்ட்!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி, 314 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. முதல் நாள் ஆட்டத்தின் போது ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் ரிட்டர்ய்டு ஹர்ட் மூலம் வெளியேறி ஸ்கேனுக்கு அழைத்துசெல்லப்பட்டார்.
இந்நிலையில் தற்போது காயத்துடன் இரண்டாம் நாளில் இந்திய அணிக்காக பேட்டிங் செய்துவருகிறார்.
மீண்டும் களமிறங்கிய ரிஷப் பண்ட்..
முதல் நாளில் இந்திய அணியின் ஸ்கோர் 212/3 என்ற நிலை இருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயற்சித்தார் ரிஷப் பண்ட். அப்போது பந்து மிஸ்ஸாகி வேகமாக வந்து அவரது காலை தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த ரிஷப் பண்ட் மருத்துவக் குழுவை அழைத்தார். பந்து தாக்கியதால் ரத்தம் வெளிப்பட, வலியால் அவதிப்பட்ட ரிஷப் பண்ட் மினி ஆம்புலன்ஸ் மூலம் ஸ்கேனுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
37 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் மைதானத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் பண்ட்.
இந்நிலையில் ஸ்கேனில் அவருடைய கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், 6 வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால் பிசிசிஐ தரப்பில், காயம் இருந்தாலும் இரண்டாம் நாளில் அணிக்காக ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்தபிறகு ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கி விளையாடிவருகிறார்.