ரிஷப் பண்ட்டுக்கு எலும்பு முறிவு.. மீண்டும் இஷான் கிஷன்..?
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடந்துவரும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 3 போட்டிகள் முடிவை எட்டியுள்ளன. இதில் இங்கிலாந்து 2 போட்டியில் வெற்றிபெற்று 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழலில் இரண்டு அணிக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் அரைசதமடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
இந்திய அணியின் ஸ்கோர் 212/3 என்ற நிலை இருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆட முயற்சித்தார் ரிஷப் பண்ட். அப்போது பந்து மிஸ்ஸாகி வேகமாக வந்து அவரது காலை தாக்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த ரிஷப் பண்ட் மருத்துவக் குழுவை அழைத்தார். பந்து தாக்கியதால் ரத்தம் வெளிப்பட, வலியால் அவதிப்பட்ட ரிஷப் பண்ட் மினி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டார். 37 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் மைதானத்தில் இருந்து பாதியில் வெளியேறினார் பண்ட்.
இந்நிலையில் பண்ட்டுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்ட்டுக்கு எலும்பு முறிவு.. இஷான் கிஷனுக்கு வாய்ப்பு!
காயம் ஏற்பட்டதற்குபிறகு மருத்துவனைக்கு ஸ்கேனுக்கு பண்ட் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அவருடைய கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் தொடரிலிருந்து வெளியேறும் பட்சத்தில், நீண்டகாலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவரும் இஷான் கிஷனுக்கு ஐந்தாவது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின் படி தேர்வுக்குழு இஷான் கிஷனை தொடர்புகொண்டதாகவும், ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் இணைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு மன சோர்வு காரணமாக சில நாட்கள் ஓய்வு எடுத்திருந்த இஷான் கிஷன், பின்னர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். பிசிசிஐ அனைத்து வீரர்களும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட அறிவுறுத்தியிருந்த நிலையில், இஷான் கிஷன் அதை பின்பற்ற தவறவிட்டார். இதனால் மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்கி பிசிசிஐ அவரை தண்டித்தது.
அதற்குபிறகு அனைத்துவிதமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிவரும் இஷான் கிஷன் இன்னும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அவர் கடந்த ஜுன் மாதம் கவுண்டி போட்டியில் பங்கேற்று 2 அரைசதங்கள் அடித்ததுடன், விக்கெட் கீப்பிங்கில் 5 விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.