படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவி.. உயர்கல்விக்கு உதவிய ரிஷப் பண்ட்! குவியும் பாராட்டு
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், தன்னுடைய ஆக்ரோஷமான பேட்டிங்கிற்காக உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும், உடைந்த காலுடன் இந்திய அணிக்காக விளையாடி அரைசதமடித்த அவர், இங்கிலாந்து ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றிருந்தார்.
இந்த சூழலில் கால்விரலில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சையில் இருந்துவரும் ரிஷப் பண்ட், கர்நாடகாவில் கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பில் 85% பெற்ற ஒரு பெண்ணுக்கு உயர்கல்வி படிக்க பண உதவி செய்துள்ளார். இது ரிஷப் பண்டிற்கு பல்வேறு பாராட்டுகளை பெற்றுக்கொடுத்து வருகிறது.
படிப்புக்கான கட்டணத்தை செலுத்திய ரிஷப் பண்ட்..
பாகல்கோட் (BAGALKOT) மாவட்டத்தை சேர்ந்த ஜோதி கனாபுர் (JYOTI KANABUR) என்ற மாணவி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர விரும்பிய நிலையில் அதற்குரிய பணம் இல்லாமல் தவிக்க நேர்ந்தது. மாணவியின் தந்தை டீக்கடை நடத்திவரும் தொழில் செய்வதால், அவரால் உயர்கல்விக்கான பணத்தை புரட்ட முடியவில்லை.
இதனால் மாணவியின் பெற்றோர் தங்களுக்கு தெரிந்த உள்ளூர் நபரான அனில் என்பவரிடம் இது குறித்து முறையிட அவர் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் நண்பர்கள் மூலம் ரிஷப் பந்த்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையறிந்த பந்த் உடனடியாக 40 ஆயிரம் ரூபாயை மாணவி ஜோதிக்காக கல்லூரிக்கே நேரடியாக அனுப்பி உதவி செய்துள்ளார். இதற்காக அந்த மாணவி ரிஷப் பந்த்துக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "நான் கலகாலியில் பி.யு.சி. முடித்தேன், பிசிஏ படிக்க வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால் எங்கள் நிதி நிலைமை நன்றாக இல்லை. நான் உள்ளூரில் அனில் என்ற அண்ணாவை உதவிக்காக அணுகினேன், அவர் அவரது நண்பர்களைத் தொடர்பு கொண்டார். அவர்கள் ரிஷப் பந்தைத் தொடர்பு கொண்டனர், அவர் எனக்கு உதவினார். கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கட்டும். அவரது உதவி என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது" என்று பேசியுள்ளார்.