வலியுடன் வரலாறு.. ரிஷப் பண்ட் படைத்த 2 புதிய சாதனைகள்!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் நாள் ஆட்டத்தின் போது ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர் ரிட்டர்ய்டு ஹர்ட் மூலம் வெளியேறி ஸ்கேனுக்கு அழைத்துசெல்லப்பட்டார்.
அதற்குபிறகு வெளிவந்த தகவல்கள் அவருக்கு கால்விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது, மீண்டும் பேட்டிங்கிற்கு வரமாட்டார் என்று தெரிவித்தன. ஆனால் அணிக்காக மீண்டும் வந்து காயத்துடன் விளையாடிய ரிஷப் பண்ட், உடைந்த காலுடன் அரைசதமடித்து அசத்தினார்.
இந்நிலையில் புதியதாக இரண்டு சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார் ரிஷப் பண்ட்.
2 சாதனைகள் படைத்த ரிஷப் பண்ட்..
1. அதிக ரன்கள் அடித்த வீரர்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ரிஷப் பண்ட்.
ரோகித் சர்மா 69 இன்னிங்ஸில் விளையாடி 2716 ரன்கள் அடித்த நிலையில், 67 இன்னிங்ஸில் விளையாடியிருக்கும் பண்ட் 2717 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
2. அதிக சிக்சர்கள்:
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்திருந்த சேவாக்கின் சாதனையை சமன்செய்தார் ரிஷப் பண்ட். சேவாக் 90 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில், அதை சமன்செய்துள்ளார். 88 சிக்சர்கள் அடித்திருந்த ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளினார்.