கம்பீர் உடன் விரிசல்..? ரோகித் இடையே நடந்த விவாதம்.. வெற்றிக் கொண்டாட்டத்தை மறுத்த கோலி!
தென்னாப்பிரிக்கா இந்தியாவை 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் வீழ்த்திய நிலையில், கவுதம் கம்பீர் உடன் மூத்த வீரர்கள் ரோகித்-கோலி இடையே விரிசல் ஏற்பட்டதாக தகவல். விரைவில் பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.. கடைசி 12 மாதங்களுக்குள் 2 முறை சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கும் நிலையில், கவுதம் கம்பீரின் தலைமை பொறுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன..
போதாக்குறைக்கு தென்னாப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் இந்திய வீரர்களை மோசமாக விமர்சித்து பேசியதும் பிரச்னையாக மாற, சமூகவலைதளத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும், கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கருக்கு எதிராகவும் கருத்துகள் வலம்வருகின்றன..
இந்தசூழலில் கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கருக்கு எதிராக ரோகித் மற்றும் கோலியின் ரசிகர்கள் ட்ரோல் செய்துவருவது பிசிசிஐக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது.. மேலும் சமூக வலைதளத்தில் கம்பீர் மற்றும் ரோகித் இடையே விவாதம் நடப்பது போலவும், கோலி கம்பீரை புறக்கணித்தது போலவும் வீடியோக்கள் வலம்வருவதும் டிரெஸ்ஸிங் அறையில் குழப்பம் இருப்பதாக காட்டுகின்றன..
கம்பீர் vs ரோகித்-கோலி இடையே விரிசல்..
சமூக வலைதளத்தில் ஏற்கனவே ரோகித்-கம்பீர் இடையே விவாதம், கம்பீரை புறக்கணித்த கோலி போன்ற வீடியோக்கள் வலம்வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் கோலி அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தில் எவ்வளவு முறை அழைத்தும் கலந்துகொள்ள மறுப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.. மேலும் அந்த வீடியோவில் கேப்டன் கேஎல் ராகுல் கேக் வெட்டி கொண்டாடும்போது, அவருக்கு பின்னால் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா மீண்டும் பேசிக்கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது..
இந்தசூழலில் இந்திய ஒருநாள் அணியில் கம்பீர் மற்றும் மூத்த வீரர்களான ரோகித்-கோலி இடையே நல்ல உறவு நீடிக்கவில்லைவும், விரைவில் ரோகித் மற்றும் கோலியின் நிரந்த இடம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், “கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் விராட் கோலி-ரோகித் சர்மா இடையேயான உறவுகள் இருக்க வேண்டிய அளவுக்கு சிறப்பாக இல்லை, மேலும் ரோ-கோ இருவரின் எதிர்காலம் குறித்து விரைவில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இது ராய்ப்பூர் அல்லது விசாகப்பட்டினத்தில் - இரண்டாவது அல்லது மூன்றாவது ஒருநாள் போட்டிகள் நடைபெறும் இடங்களில் நடக்கலாம்” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்ததாக ஜாக்ரான் தெரிவித்துள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா தொடரின்போதே ரோகித்தும் அகர்கரும் தொடர்பில் இல்லை எனவும், அப்போதிலிருந்து இன்று வரை, கோலியும் கம்பீரும் கூட ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை எனவும், மேலும் மூத்த வீரர்களின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கம்பீரைத் தாக்கும் விதம் பிசிசிஐயை வருத்தப்பட வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது..

