”கருண் நாயர் இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர்..” சுப்மன் கில்லை காட்டமாக விமர்சித்த கைஃப்!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. வெற்றிக்கு 193 ரன்களே தேவையாக இருந்த நிலையில் இந்தியாவே வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்தியாவின் டாப் ஆர்டர் வீரர்கள் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்தியா.
தொடர் முழுவதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், கில், கருண் நாயர் அனைவரும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். 3 பேரில் ஒருவர் அரைசதமடித்திருந்தால் கூட லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா வெற்றியை ருசித்திருக்கும்.
‘கிரிக்கெட்டே இன்னொரு வாய்ப்பு கொடு’ என பதிவிட்ட கருண் நாயர் 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஏமாற்றினார். இந்த 3 போட்டியிலும் அவருக்கு சதமடிக்கும் வாய்ப்பு இருந்தது, சிறப்பான தொடக்கம் கிடைத்தபோதும் கவனசிதறலால் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்தையே கொடுத்தார் கருண் நாயர்.
இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சாய் சுதர்சன் அரைசதமடித்து அசத்தியுள்ளார்.
கருண் நாயர் இன்னொரு வாய்ப்புக்கு தகுதியானவர்..
கருண் நாயருக்கு 4வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில்லை முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருக்கும் கைஃப், “இன்று கருண் நாயரை ஆதரித்து இன்னொரு வாய்ப்பு வழங்க சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர் அதில் தோல்வியடைந்தார். கருண் நாயர் இன்னும் ஒரு வாய்ப்புக்கு தகுதியானவர், அவரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஒரு தலைவராக கடினமான முடிவுகளை எடுக்கும்போது கிடைக்கும் மரியாதையை சுப்மன் கில் பெறத் தவறிவிட்டார்” என்று விமர்சித்துள்ளார்.
4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் அடித்து விளையாடிவருகிறது. ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அரைசதமடித்து வெளியேறிய நிலையில், காலில் ஏற்பட்ட காயத்தால் ரிஷப் பண்ட் பாதியில் மைதனாத்தில் இருந்து வெளியேறினார்.