\
RCB Won in Vs Gujarat Titans Qualifier 1 IPL 2026
rcbx page

IPL 2026 | கதகளி ஆடிய ரஜத் படிதார்.. குஜராத்தை எளிதில் வீழ்த்தி Final சென்ற RCB!

ஒருகட்டத்தில், அவர்கள் இருவரும் வெளியேறிய நிலையில், அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதாரும், ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குருணல் பாண்டியாவும் குஜராத் பந்துவீச்சைச் சிதறடித்தனர்.
Published on

நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையரில் குஜராத்தை வீழ்த்தி, ஆர்சிபி மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

2026 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. அதன்படி, முதலாவது பிளேஆப் போட்டி நேற்று தருமசலாவில் நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த குஜராத் அணி, பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து, வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். வெங்கடேஷ் 19 ரன்களில் நடையைக் கட்டினாலும், விராட் கோலி 43 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவருக்குத் துணையாக தேவ்தத் படிக்கலும் 30 ரன்கள் எடுத்தார்.

ஒருகட்டத்தில், அவர்கள் இருவரும் வெளியேறிய நிலையில், அடுத்து களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதாரும், ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குருணல் பாண்டியாவும் குஜராத் பந்துவீச்சைச் சிதறடித்தனர். அதிலும், ரஜத் படிதார் கதகளி ஆடினார். அவர், தொடர்ந்து பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பியபடியே இருந்தார். இதனால், ரசிகர்களின் மகிழ்ச்சி கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்தது. இறுதிவரை களத்தில் நின்ற அவர், 33 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணையாக நின்ற குருணல் பாண்டியா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கி மிரட்டிய ஜிதேஷ் சர்மா 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.

RCB Won in Vs Gujarat Titans Qualifier 1 IPL 2026
குவாலிஃபையர் 1-ல் RCB vs GT மோதல்.. ஆடுகளம் எப்படி..? முந்தைய ரெக்கார்ட் என்ன?

பின்னர் கடுமையான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கத்திலேயே கேப்டன் சுப்மன் கில்லின் (2) விக்கெட்டை இழந்தது. அடுத்து, தமிழக வீரர் சாய் சுதர்சனும் 14 ரன்களில் ஏமாற்றினார். எனினும், ஜோஸ் பட்லர் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து, அவர் பங்குக்கு 29 ரன்கள் எடுத்தார். இதற்கிடையே நிஷாந்த் (5), வாஷிங்டன் சுந்தர் (8), ஹோல்டர் (0) ஆகியோர் விரைவிலேயே பெவிலியன் திரும்பினர். ஆனால், ராகுல் தெவாத்யா மட்டும் தனியாக நின்று போராடினார். அவர் அதிகபட்சமாக 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.

Rahul Tewatia
Rahul Tewatia

எனினும், பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால், பெங்களூரு அணியின் வெற்றி உறுதியானது. குஜராத் அணி 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து ஆர்சிபி 92 ரன்களில் வெற்றிபெற்றதுடன், நேரிடையாக இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இதன்மூலம் சிஎஸ்கே மற்றும் மும்பைக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு சென்ற அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது. அதேநேரத்தில், குவாலிஃபையர் போட்டியில் தோல்வியைச் சந்தித்த குஜராத் அணி, சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான் அணிகளில் வெற்றிபெறும் அணியுடன் மோதும் வாய்ப்பு உண்டு.

RCB Won in Vs Gujarat Titans Qualifier 1 IPL 2026
RCB பவுலிங்கை பந்தாடிய SRH.. 255 ரன்கள் குவித்து மிரட்டல்! டாப் 2 இடம் காலி?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com