'தோல்விக்கு Pant-ஐ குற்றஞ்சாட்டிய கில்..' சாடிய ரவி சாஸ்திரி!
முதல் ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை’க்கான டெஸ்ட் தொடரானது நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தற்போது பவுலர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.
முதல் 3 போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, சின்ன சின்ன தவறுகளால் 3-0 என்ற எட்டவேண்டிய வாய்ப்பை இழந்து 2-1 என பின்தங்கியுள்ளது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் சுப்மன் கில், செய்தியாளர்கள் சந்திப்பில் வீரர்களின் குறையை வெளிப்படையாக சுட்டிக்காட்டி வருகிறார். 3வது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரிஷப் பண்ட்டை சுப்மன் கில் காரணம் கூறியிருப்பது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
சுப்மன் கில் அப்படி சொல்லக்கூடாது..
லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுப்மன் கில், “5-ம் நாளில் பேட்டிங் செய்வது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும், அதனால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது எங்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் ரிஷப் பண்ட்டின் ரன் அவுட் எங்களை 50-100 ரன்களை கூடுதலாக எடுப்பதை தடுத்து நிறுத்தியது.
வீரர்களின் தனிப்பட்ட சாதனைகளை விட அணியின் வெற்றிதான் முக்கியம் என்பதற்கான விவாதங்களை நாங்கள் நடத்திவருகிறோம். ரன் அவுட்டை பொறுத்தவரை அழைப்பு ரிஷப் பண்ட் உடையதாக இருந்தது, ஆபத்தான முனைக்கு கேஎல் ராகுல் தான் சென்றார். ஆனால் ரிஷப் பண்ட் அவுட் செய்யப்பட்டது பிழையாக அமைந்தது” என்று கில் பேசினார்.
சுப்மன் கில்லின் இந்த பேச்சை சுட்டிக்காட்டி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுப்மன் கில் குறித்து பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, “பத்திரிகையாளர் சந்திப்புகளில் சுப்மன் கில் ஏன் எப்போதும் ரிஷப் பண்ட்டை குறை சொல்ல முயற்சிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. முதல் டெஸ்ட்டில் காரணம் சாட்டிய பிறகு, தற்போதும் அது நடந்தது. ஒரு கேப்டன் தன்னுடைய எந்த வீரரின் பெயரையும் இப்படி குறிப்பிடக்கூடாது. இது ஏமாற்றமளிக்கிறது” என்று பேசியுள்ளார்.
மேலும், ”ரிஷப் பண்ட்டின் மீது எந்த உத்தரவுகளையும் திணிக்காதீர்கள், அவரை அவராக பேட்டிங் செய்ய விடுங்கள். அவருடைய கம்ப்யூட்டர் சிறப்பாகவே வேலை செய்கிறது. உலகின் அனைத்து மூலையிலும் சதமடித்தவருக்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரியும்” என்றும் சாடியுள்ளார்.