இதுதான் கடைசி தொடரா? ரோகித், கோலியின் எதிர்காலம்? உடைத்து பேசிய ரவி சாஸ்திரி!
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களும், முன்னாள் கேப்டன்களுமான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஏற்கெனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவங்களில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டனர். அவர்கள், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர். அதிலும் குறிப்பாக, 2027 உலகக் கோப்பை தொடர் வரை விளையாட வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்து வருகிறது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அவர்கள் இருவரும் சுப்மன் கில் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளனர். எனினும், இந்தத் தொடரே அவர்களது கடைசித் தொடராக இருக்கும் எனப் பலராலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த தொடரில் அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே எதிர்காலம் குறித்த அவர்களது கனவு நிறைவேறும்.
இந்த நிலையில், அவர்களது எதிர்காலம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ”விராட் கோலி ஒரு சேஸிங் மாஸ்டர். ரோஹித் சர்மா ஓப்பனிங்கில் வெளுத்து வாங்கக்கூடியவர். அவர்கள் இருவரும், இப்போதும் தங்களிடம் போதுமானளவு திறமை இருப்பதாக கருதுகின்றனர். ஆகையால், உலகக் கோப்பையில் விளையாடுவது அவர்களுடைய பசி, ஃபிட்னெஸ், விளையாட்டின் மீதான ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
தங்களிடம் இருக்கும் அனுபவத்திற்கு அவர்களுக்கு அவையெல்லாம் எளிதாக வரும். உலகக் கோப்பைக்கு நீண்டதூரம் இருப்பதால், ஒருசமயத்தில் ஒரு தொடரை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு நான் அறிவுரை சொல்வேன். இந்த தொடரின் முடிவில் அவர்கள் தங்களது உணர்வுகளை அறிவார்கள். அதன் பின்னர், அது அவர்களின் முடிவு. ஆனால் என்னைப் பொறுத்தவரை இருவருமே தனிப்பட்ட முறையில் இளம்வீரர்கள் தங்களைத் தள்ளுவதை அறிவார்கள்.
எனவே அவர்களின் கெரியரின் கடைசி கட்டத்தில் இருப்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். விராட் மற்றும் ரோஹித் விளையாடுவதை ரசிக்கவில்லை என்றால், அவர்கள் ஒருநாள் போட்டிக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யலாம். விராட் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார், ரோஹித்தும் அப்படித்தான். அவர்களை, யாரும் ஓய்வு பெறச் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் தாங்களாகவே ஓய்வு பெற்றார்கள். ஒருநாள் போட்டிகளுக்கும் இதே நிலைதான் என்று நான் நினைக்கிறேன்.ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஃபார்மின்றி மகிழ்ச்சியின்றி விளையாடுவதாக நினைத்தால் அவர்கள் தங்களுக்கு தாங்களே விடை பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.