விராட், ரோகித் ஓய்வு | மௌனம் கலைத்த கவுதம் காம்பீர்!
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவும் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அடுத்தடுத்து அறிவித்தனர். இந்தத் தொடரில் மூத்த வீரர்கள் இல்லாதது குறித்து, அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தவிர, கோலி, ரோகித் ஆகியோர் தங்களது முடிவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விராட், ரோகித் ஓய்வு குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து அவர், “ஓய்வு என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு. அணி நிர்வாகத்திலோ அல்லது தேர்வுக் குழுவிலோ யாருக்கும் ஒரு வீரரை கட்டாயப்படுத்த உரிமை இல்லை. சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதபோது, ‘யாராவது தவறவிட்டால், நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய மற்றொரு நபருக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்றேன். அதுபோல், இங்கிலாந்து தொடரில் அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். தற்போது இரண்டு மூத்த வீரர்கள் இல்லாதது கடினமாகத்தான் இருக்கும். எனினும், வேறு சிலர் தங்கள் கையை உயர்த்தி, ’சரி, நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்’ என்று சொல்வதற்கான வாய்ப்பு இது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.