ரோகித், விராட் ஓய்வு | ”முடிவு குறித்து யோசிக்கணும்” - யுவராஜ் சிங்கின் தந்தை எதிர்வினை!
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்த அணியுடன் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவும் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அடுத்தடுத்து அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர்களின் ஓய்வு குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்துக்குச் செல்லும் அணியில் அனுபவ வீரர்கள் இல்லாததால், விராட்டும், ரோகித்தும் இடம்பெற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதே கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையும் பயிற்சியாளருமான யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். அவர்கள் இருவரும், இப்போது தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் அல்ல. இது தேசம், ரசிகர்கள் மற்றும் மக்கள் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த உணர்ச்சிகளைப் பற்றியது. விராட்டுக்கு இன்னும் குறைந்தது பத்து வருட கிரிக்கெட் அனுபவம் உள்ளது. ரோஹித் என்னிடம் வந்தால், அவர் மீண்டும் உச்ச உடற்தகுதியுடன் இருப்பதை நான் உறுதி செய்வேன்.
2011ஆம் ஆண்டு, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் போன்ற வீரர்கள் எந்த தெளிவான காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டனர். யுவராஜ் ஓய்வு பெற்றபோது, நான் அவரைத் திட்டினேன். ’அழுத்தத்திற்கு அடிபணிய வேண்டாம்’ என நான் அவரிடம் சொன்னேன். அவர் நம்பமுடியாத அளவிற்கு உடற்தகுதியுடன் இருந்தார். இப்போதும் இருக்கிறார். கிரிக்கெட் வீரர்கள் வெளிப்புற அழுத்தங்களுக்கு சரணடைவதற்குப் பதிலாக அணியில் தங்கள் இடத்திற்காகப் போராட வேண்டும்.
பி.சி.சி.ஐ ஒரு பெற்றோரைப்போலச் செயல்பட வேண்டும். அவர்கள், வீரர்களைப் பாதுகாத்து ஆதரிக்க வேண்டும். ஈகோ அல்லது அரசியல் முடிவுகளை ஆணையிடக் கூடாது. நான் யுவராஜை அழைத்து, ’கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டாம் என்றும், பின்னர் அந்த முடிவுக்கு அவர் வருத்தப்பட வேண்டியிருக்கும்’ என்றும் கோலியிடம் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.