பிசிசிஐ தலைவராகும் முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி? - கங்குலி விலகும் காரணம் என்ன?

பிசிசிஐ தலைவராகும் முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி? - கங்குலி விலகும் காரணம் என்ன?
பிசிசிஐ தலைவராகும் முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி? - கங்குலி விலகும் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ-யின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ-யின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதற்கிடையில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, சவுரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோர் தங்களது பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் உண்டாகியது.

அதன்படி, பிசிசிஐ தலைவராக உள்ள சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக உள்ள ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதால் அந்தப் பதவிகளுக்கான தேர்தல் பணிளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மற்றும் நாளை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை 13-ம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. வேட்பாளர்கள் தங்களது மனுக்களை அக்டோபர் 14-ம் தேதிக்குள் திரும்பப் பெறலாம் என்றும், அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தேர்தலில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்த முறை சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை என்று உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. எனினும் செயலாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிட ஜெய் ஷா முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசியின் தலைவராக தற்போது நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளே உள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், தலைவர் பதவியில் உள்ள அவரின் பதவிக்காலம் இந்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து நடக்கும் ஐசிசி தலைவருக்கான தேர்தலில், தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி போட்டியிட உள்ளார். இதனை முன்னிட்டுத்தான் தற்போது பிசிசிஐ தலைவராக அவர் போட்டியிடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ரோஜர் பின்னி, பிசிசிஐ-யின் தலைவர் பதவிக்கு இன்று  வேட்பு மனு தாக்கல் செய்யுவுள்ளதாகவும், பின்னர் ஒருமனதாக அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ள ரோஜர் பின்னி, பிசிசிஐயின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 1983-ல் கபில்தேவ் தலைமையிலான ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஜர் பின்னியும் இடம்பெற்றிருந்தார். அந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை பெற்றிருந்தார். இந்திய அணிக்காக 27 டெஸ்ட்டுகள், 72 ஒருநாள் ஆட்டகளில் விளையாடியுள்ளார்.

மேலும், பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லாவும், இணை செயலாளராக தேவஜித் சாய்கியாவும், பொருளாளராக ஆஷிஷ் ஷெலரும், ஐபிஎல் சேர்மனாக அருண் துமாலும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com