2026 ஐபிஎல்லின் முதல் த்ரில்லர் போட்டி.. 6 ரன்னில் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த 2026 ஐபிஎல் த்ரில்லரில், ஜெய்ஸ்வால் அரைசதம், துருவ் ஜூரல் 75 ரன்கள் உதவியுடன் ராஜஸ்தான் 210 ரன்கள் குவித்தது. 211 ரன்களை துரத்திய குஜராத் சார்பில் சாய் சுதர்சன் 73 ரன்கள் அடித்தும், இறுதியில் ஆர்ச்சர், துஷார் தேஸ்பாண்டே கட்டுப்படுத்த, ராஜஸ்தான் 6 ரன்கள் வித்தியாசத்தில் சஸ்பென்ஸ் வெற்றி பெற்றது.
2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் ஒற்றைக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. சுப்மன் கில் உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு பதிலாக ரசீத் கான் குஜராத் கேப்டனாக வழிநடத்தினார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
5 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்ட சூர்யவன்ஷி 31 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து வந்த துருவ் ஜூரல் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்து 75 ரன்களை குவிக்க 210 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,
கோட்டைவிட்ட குஜராத்.. ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
211 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய டைட்டன்ஸ் அணியில், தொடக்க ஜோடியாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் குமார் குஷாக்ரா இருவரும் முதல் விக்கெட்டுக்கே 78 ரன்கள் சேர்த்து அபாரமாக தொடங்கினர். நல்ல பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய குஷாக்ரா 18 ரன்னில் வெளியேற, தனியொரு ஆளாக ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்த சாய் சுதர்சன் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 44 பந்தில் 73 ரன்கள் அடித்து ஆட்டத்தை குஜராத் பக்கம் திருப்பிவிட்டு வெளியேறினார்.
ஆனால் அடுத்துவந்த க்ளென் ஃபிளிப்ஸ் 3 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்கள், ஷாருக் கான் 11 ரன்கள், திவேத்தியா 12 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற ராஜஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. 5 பவுண்டரிகளுடன் நம்பிக்கை கொடுத்த ஜோஸ் பட்லரும் 26 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டம் முழுக்க ராஜஸ்தானின் பக்கமே சென்றது.
ஆனால் கடைசியாக வந்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட ககிசோ ரபாடா மற்றும் 3 பவுண்டரிகளை விரட்டிய ரஷீத் கான் இருவரும் ஆட்டத்தை மீண்டும் குஜராத் பக்கம் திருப்பினர். கடைசி 2 ஓவருக்கு 15 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தபோது எப்படியும் குஜராத்தே வெற்றிபெறும் என்ற நிலையே இருந்தது. ஆனால் 19வது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே ஆர்ச்சர் விட்டுக்கொடுக்க, ராஜஸ்தான் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.
கடைசி 6 பந்துக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீசிய துஷார் தேஸ்பாண்டே வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தானுக்கு வெற்றியை தேடித்தந்தார். கையிலிருந்த போட்டியை குஜராத் கோட்டைவிட 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது.

