தங்க வேட்டை| வில்வித்தை இறுதிப்போட்டியில் உலக சாம்பியனை வீழ்த்தினார் பாயல் நாக்!
பாங்காக் பாரா வில்வித்தை தொடரின் மகளிர் காம்பவுண்ட் இறுதியில் 18 வயது இந்திய வீராங்கனை பாயல் நாக், நடப்பு உலக சாம்பியனும் சக இந்திய வீராங்கனையுமான ஷீத்தல் தேவியை 139-136 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் ஐதிமோவாவை தோற்கடித்த பாயல், இறுதிப்போட்டியில் கடைசி இரண்டு அம்புகளில் 10,10 புள்ளிகள் எய்தி உலக அரங்கில் புதிய நட்சத்திரமாக உயர்ந்தார்.
இந்திய பாரா வில்வித்தையில் உலக சாம்பியனான ஷீத்தல் தேவியை தொடர்ந்து ஒரு புதிய நட்சத்திரம் உதித்துள்ளது. அதிலும் உலக வீரர்களை வீழ்த்தியதோடு உலக சாம்பியனான ஷீத்தல் தேவியையே இறுதிப்போட்டியில் வீழ்த்தி மகுடம் சூடியுள்ளார் 18 வயதான இந்தியாவின் பாரா வில்வித்தை வீராங்கனை பாயல் நாக்.
இன்று நடைபெற்ற பாங்காக் வில்வித்தை பாரா தொடர் 2026-ன் மகளிர் காம்பவுண்ட் இறுதிப் போட்டியில், இந்தியாவின் பாயல் நாக் நடப்பு உலக சாம்பியனான ஷீத்தல் தேவியை அதிர்ச்சிக்குள்ளாக்கி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்.
இந்தியாவின் தலைசிறந்த 2 வில் வீராங்கனைகளும் நாக்-அவுட் சுற்றுகளை தங்கள் நம்பிக்கையால், அதீத திறமையால் தங்கள் வசமாக்கினர். அரையிறுதியில் ஷீத்தல், சிங்கப்பூரின் நூர் ஷாஹிதா அலிமை 147–142 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். அதேசமயம், பாயல் நாக் ஐதிமோவாவை 144–140 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, ஒரு பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் காலடி வைத்தார்.
இன்று பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான ஷீத்தல் தேவி 136 புள்ளிகளை எடுக்க, கடைசி 2 வாய்ப்பில் 10, 10 புள்ளிகளை அடித்த பாயல் நாக் 139 புள்ளிகளை முடிவில் பெற்று மகுடம் சூடினார்.
உலக வீரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஷீத்தல் தேவியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி தங்கம் வென்ற பாயல் நாக் தன்னுடைய திறமையை உலக அரங்கில் பரைசாற்றினார்.

