ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்ற குயின்டன் டி காக்.. SA அணியில் மீண்டும் இடம்!
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக், பாகிஸ்தான் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணியுடன் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. அந்த வகையில், இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் போட்டி, நவம்பர் 4 தொடங்க உள்ளது. அதன்படி, பாகிஸ்தான் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், கடந்த 2023ஆம் ஆண்டு அனைத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக், தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
அதன் காரணமாக, பாகிஸ்தான் தொடருக்கான தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக ஐடன் மார்க் ராமும், ஒருநாள் அணியின் கேப்டனாக மேத்யூ ப்ரீட்ஸ்கேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டி-காக் அணிக்கு திரும்பியுள்ளது குறித்து தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், “டி காக், போட்டிக்குத் திரும்புவது எங்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும். கடந்த மாதம் அவரது எதிர்காலம் குறித்துப் பேசியபோது, அவர் இன்னும் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற வலுவான லட்சியத்தைக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் அணிக்குக் கொண்டு வரும் உழைப்பு, அனைவருக்கும் தெரியும். மேலும் அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவருவது அணிக்கு மட்டுமே பயனளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இடது கை பேட்டரான டி-காக் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்காக 155 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 45.74 சராசரியாகவும், 96.64 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 6,770 ரன்கள் எடுத்துள்ளார். மறுபுறம், 92 டி20 போட்டிகளில், 138.32 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,584 ரன்கள் எடுத்துள்ளார்.