சதமடித்த ’பிரதிகா’ திடீர் காயத்தால் விலகல்.. அரையிறுதிக்கு முன்னதாக இந்தியாவிற்கு பெரிய அடி!
இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்த பிரதிகா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் விளையாட முடியாததால், இந்திய அணிக்கு இது பெரிய பாதகமாக மாறியுள்ளது. ரசிகர்கள் இந்தியா வெற்றிபெறுமா என்ற கவலையில் உள்ளனர்.
2025 மகளிர் உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய 4 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இதில் அக்டோபர் 30-ம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடுகிறது..
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்கள் குவித்தபோதும் இந்திய அணியால் வெற்றிபெற முடியாத நிலையில், அரையிறுதியில் எப்படி வெல்லப்போகிறது என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது..
இந்தசூழலில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் சதமடித்து பிரைம் ஃபார்மில் இருந்துவரும் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் காயம் காரணமாக உலகக்கோப்பையிலிருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரிய பாதகமாக மாறியுள்ளது..
பிரதிகா ராவல் விலகல்..
வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. மழைகாரணமாக கைவிடப்பட்ட போட்டியில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்த பிரதிகா ராவலுக்கு காயம் ஏற்பட்டது. ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்ட பிரதிகா ராவலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் விளையாட முடியாது என்பதால், உலகக்கோப்பை தொடரிலிருந்து பிரதிகா விலகியுள்ளார்..
ஏற்கனவே விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ்க்கு ஏற்பட்ட விரல் காயத்தால் கடைசி லீக் போட்டியில் அவருக்கு பதிலாக உமா செட்ரி அறிமுகமானார்.. அவரும் மீண்டுவருவாரா என்ற குழப்பத்தில் இந்தியா இருக்கும் நிலையில், நல்ல ஃபார்மில் இருந்துவரும் பிரதிகா ராவல் தொடரிலிருந்து விலகியிருப்பது இந்தியாவிற்கு பெரிய அடியாக விழுந்துள்ளது..
பிரதிகா ராவல் நியூசிலாந்துக்கு எதிரான சதம் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரைசதத்துடன் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் (308) குவித்த வீராங்கனையாக உள்ளார்.. பிரதிகா கடந்தபோட்டியில் சதமடித்த பிறகு, மகளிர் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 1000 ரன்கள் எடுத்தவர், ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்கள் குவித்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனைகளை படைத்திருந்தார்..

