CSK அணிக்கு வரும் வாஷிங்டன் சுந்தர்.. டிரேடிங் உறுதி? அஸ்வின் வீடியோவில் வெளிவந்த தகவல்!
வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் உடனான உரையாடலில், தமிழக வீரர் கே விக்னேஷ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சுந்தரின் வருகை சிஎஸ்கே அணிக்கு புதிய வலிமையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. 18 வருடங்களாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து முதல் கோப்பையை முத்தமிட்டது.
அதேநேரத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தை பிடித்தன. சிஎஸ்கேவில் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ஆயுஸ் மாத்ரே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்கள் தொடரின் இறுதியில் கண்டறியப்பட்ட நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் கம்பேக் செய்ய காத்திருக்கின்றன.
இந்த சூழலில் 2026 ஐபிஎல் ஏலமானது டிசம்பர் 15-ம் தேதியும், ரீடெய்ன் செய்யப்படும் மற்றும் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகவல் வெளியானது..
இதைச்சுற்றி வீரர்களுக்கான டிரேடிங் குறித்த பேச்சுகள் அதிகரித்துவரும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணிக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
சிஎஸ்கே அணிக்கு வரும் வாஷிங்டன்..
சமிீபத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் தன்னை மெருகேற்றிகொண்ட வீரராக இருந்துவருபவர் வாஷிங்டன் சுந்தர்.. தொடக்கத்தில் பவுலிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்ட வாஷி, தன்னுடைய பேட்டிங் திறமையால் பேட்டிங் ஆல்ரவுண்டர் என்ற இடத்திற்கு நகர்ந்துள்ளார். அதனால் அவரை சர்வதேச இந்திய அணியில் ஒரு அங்கமாக தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது தேர்வுக்குழு.. அவருக்கு வழங்கப்படும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திவருகிறார் சுந்தர்..
ஐபிஎல்லை பொறுத்தவரையில் கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார் வாஷி. ஆனால் அந்த அணியில் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறாமல் இருந்துவருகிறது. டைட்டன்ஸ் அணியில் ரசீத் கான், சாய் கிஷோர், ராகுல் திவேதியா போன்ற ஸ்பின்னர்கள் இடம்பெறுவதால் அவருக்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்காமல் இருந்துவருகிறது. இதனால் தற்போது குஜராத் அணியிலிருந்து சென்னை அணிக்கு வாஷிங்டன் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்வின் உடனான உரையாடலின் போது பேசிய தமிழக வீரர் கே விக்னேஷ், வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முழு வர்த்தகம் மூலம் வரவிருப்பதாகவும், டைட்டன்ஸ் அணியிலிருந்து இந்த உறுதிப்படியான தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்..

