"இப்படி ஒரு பிரதமரை பார்த்ததேயில்லை”-பிரதமர் மோடி நேரில் ஆறுதல் சொன்னது குறித்து வீரர்கள் நெகிழ்ச்சி

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடி நேரில் வந்து ஆறுதல் கூறி வீரர்களுக்கு ஊக்கமளித்தது மிகப்பெரிய விஷயம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோடியுடன் இந்திய வீரர்கள்
மோடியுடன் இந்திய வீரர்கள்ட்விட்டர்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண வந்த பிரதமர் நரேந்திர மோடி, இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்ததையடுத்து வீரர்களின் ஓய்வு அறைக்கு (dressing room) சென்று வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில், உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு பிரதமர் மோடி நேரில் வந்து ஆறுதல் கூறி வீரர்களுக்கு ஊக்கமளித்தது மிகப்பெரிய விஷயம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி, ”உலகக்கோப்பை இறுதிப்போட்டி போன்ற ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, நாட்டின் பிரதமரிடமிருந்து பெறும் ஊக்கமென்பது எங்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஏற்கெனவே ஒரு மிகப்பெரிய போட்டியின் தோல்வியால் எங்களின் மனஉறுதி மிகவும் குறைவாக உள்ளது. அதுபோன்ற ஒரு தருணத்தில் நாட்டின் மிக முக்கியமான ஒருவர் வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் வித்தியாசமான அனுபவம்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: இந்திய ‘ஏ’ அணியை வழிநடத்தும் முதல் கேரள வீராங்கனை: கேப்டனாக மின்னு ராணி நியமனம்!

இந்தத் தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், “உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு நாங்கள் உடைமாற்றும் அறையில் அமர்ந்திருந்தோம். வீரர்களின் உடை மாற்றும் அறைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தார். அவர் வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, ’விளையாட்டுப் போட்டிகளில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது. நீங்கள் ஒட்டு மொத்த நாட்டையும் பெருமையடையச் செய்துள்ளீர்கள். இந்தத் தோல்வியை மறந்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.

நாட்டின் மிகப் பெரியத் தலைவர் எங்களுக்காக நேரம் ஒதுக்கி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மிகப்பெரிய விஷயம். நாங்கள் பிரதமர் கூறியதைக் கவனமாக கேட்டுக் கொண்டோம். அவரது ஆலோசனைகளைப் பின்பற்ற நாங்கள் முயற்சி செய்வோம். அடுத்த ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பையில் ஐசிசி கோப்பையை வெல்ல எங்களுக்கு மற்றொரு வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இதையும் படிக்க: ”15 கோடி ரூபாய்” - மீண்டும் மும்பை அணியில் இணையும் ஹர்திக் பாண்டியா... இதுதான் பின்னணி காரணமா?

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், “போட்டியில் தோல்வியைத் தழுவிய ஓர் அணியின் வீரர்களைச் சந்தித்து உத்வேகம் கொடுத்த ஒரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததேயில்லை. நம்முடைய வீரர்களுக்கு ஊக்கமளித்து ஆதரவு தந்தது பிரதமர் மோடியின் சிறப்பான அணுகுமுறை.

இது அடுத்த உலகக்கோப்பையில் நம்முடைய வீரர்கள் சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும். ஒரு நாட்டின் பிரதமரே இதுபோன்று கிரிக்கெட், ஹாக்கி அல்லது கால்பந்து வீரர்களை சந்திப்பது அவர்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நம்பிக்கை அளிப்பதாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ”ரோகித், கோலிக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்; அது ஹர்திக் கைகளில் தான் இருக்கிறது” - சோயிப் அக்தர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com