U19 Asia Cup Final| வெறுப்பேற்றிய பவுலர்.. பதிலடி கொடுத்த சூர்யவன்ஷி!
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை யு19 இறுதிப்போட்டியில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவருக்கு எதிராக,இந்தியாவின் இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷி தன் ஷூவை காட்டி சைகை செய்த செயல் கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
செய்தியாளார்- சு.மாதவன்
ஷூவைக் காட்டி சைகை செய்த வைபவ் சூர்யவன்ஷி
யு19 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தன. இதில், பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது கோப்பையைத் தட்டிச் சென்றது. முன்னதாக, கடுமையான இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி, ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொற்ப ரன்களில் வெளியேறினார்.
3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த அவர் அலி ராசா பந்துவீச்சில் ஹம்சா ஷகூரிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அவருடைய விக்கெட்டை வீழ்த்தியதில் அலி ராசா கொண்டாடினார். அதற்கு முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்து கத்தினார். இது, வைபவை வெறுப்பேற்றியுள்ளது. இதையடுத்து, அலி ராசா முன்பு வைபவ் தன் ஷூவைக் காட்டி ஏதோ சைகை செய்தபடி வெளியேறினார். இது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகி வருகிறது.
வைபவின் சர்ச்சை குறித்து விமர்சனம்
இந்தச் செயலை மூத்த பத்திரிகையாளர் போரியா மஜும்தார் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், ”சூர்யவன்ஷி செய்த செயல் அசிங்கமானது. அது ஒரு இழிவான சைகை. வைபவ் சூர்யவன்ஷி திறமையின் மீது எந்த சந்தேகமுமில்லை. ஆனால் அவர் மைதானத்தில் செய்த செயல் பொறுப்பற்ற கோபத்தையே எடுத்துக்காட்டுகிறது.
.ஆரம்பகால அவரது ஐபிஎல் வெற்றியின் பயணம் புகழுடன் கூடிய தலைகனத்தை உண்டாக்கியது. என்றாலும், குறிப்பாக சர்வதேசப் போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரராக அவரது வளர்ச்சிக்கு கோபத்தைக் கட்டுப்படுத்தவும், பணிவாக இருக்கவும், தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்வது அவசியம்” என விமர்சித்துள்ளார். இந்த செயலுக்கு இருதரப்பிலும் இணையவாசிகள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
