WTC புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் முடித்த பாகிஸ்தான்.. வங்கதேசத்துடன் 2வது அணியாக இணைந்தது!
2023-2025ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.
2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது ஜுன் 11 முதல் 15-ம் தேதிவரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் நடப்பு WTC சுழற்சியின் கடைசி டெஸ்ட் தொடரானது இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஜனவரி 29 முதல் பிப்ரவரி 25 வரை இரண்டு போட்டிகள் கொண்ட தொடராக இலங்கையில் நடைபெறவிருக்கிறது.
இந்தசூழலில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, 2023-25ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்துள்ளது.
34 வருடத்திற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தோல்வி..
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் 1990-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்து சாதனை படைத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 9 விக்கெட்டுகளை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின்னர் ஜோமல் வாரிக்கன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான படுதோல்விக்கு 2023-2025ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியில் கடைசி இடத்தில் முடித்துள்ளது பாகிஸ்தான் அணி. கடந்த இரண்டு WTC சுழற்சியிலும் வங்கதேச அணி கடைசி இடத்தை பிடித்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி வங்கதேசத்துடன் இரண்டாவது அணியாக இணைந்துள்ளது.