"வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்; ஓய்வு அறிவித்து விடாதீர்கள்"- Rohit-க்கு 15வயது சிறுவன் எழுதிய கடிதம்!
2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பையில் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் ஜொலித்த ரோகித் சர்மா, சமீப காலமாக மோசமான ஃபார்மில் சொதப்பி வருகிறார். அவருடைய பேட்டிங் ஃபார்மானது, அவருடைய கேப்டன்சியிலும் வெளிப்பட்டது. அதன் காரணமாகவே சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. அது அவருக்கு கடுமையான விமர்சனங்களை பெற்றுத்தந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் மோசமான பேட்டிங் ஃபார்மை தொடர்ந்து ரோகித் சர்மா, கடைசி டெஸ்ட் போட்டியில் கேப்டன் பதவியிலிருந்து விலகி பெஞ்ச் செய்யப்பட்டார்.
அந்த நிகழ்வுக்கு பிறகு ரோகித் சர்மாவின் கேப்டன்சி அவ்வளவு தான், அவர் ஓய்வை அறிவிக்க போகிறார் என்ற வதந்தி வேகமாக பரவியது. ஆனால் எனது ஓய்வை நான் தான் எடுப்பேன், மைக்குடன் கருத்து சொல்பவர்கள் எடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த சூழலில் தன்னுடைய பேட்டிங் ஃபார்மை மீட்டு எடுத்து வருவதற்காக ரஞ்சிப்போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்றார். ஆனால் அங்கு முதல் இன்னிங்ஸில் 3 ரன்கள் அடித்த அவர், இரண்டாவது இன்னிங்ஸில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என சிறப்பாக தொடங்கினாலும் 28 ரன்னில் வெளியேறினார்.
தயவுசெய்து ஓய்வு அறிவித்து விடாதீர்கள்..
ரஞ்சிப்போட்டியிலும் ரன்கள் அடிக்காத ரோகித் சர்மாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், தயவுசெய்து ஓய்வை அறிவித்து விடாதீர்கள் என ரோகித்தின் 15 வயது சிறுவன் எமோசனலாக கடிதம் எழுதியுள்ளார்.
சிறுவன் எழுதியிருக்கும் கடிதத்தில், "எனக்கு பிடித்த வீரர் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேனான எனது ஐடல் கிரிக்கெட்டரான ரோகித் சர்மா, நான் இதை சொல்லும்போது மில்லியன் கணக்கான மற்றவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று எனக்குத் தெரியும். நான் இந்த அழகான கிரிக்கெட் விளையாட்டை பார்க்கக் காரணமே நீங்கள்தான், உங்களுடைய எராவில் பிறந்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறேன், உங்களின் நேர்த்தியான பேட்டிங்கைப் பார்த்து ஆசீர்வதிக்கப்பட்டேன்.
உங்களுடைய ஃபார்ம் தற்காலிகமானது தான், கிளாஸ் மட்டுமே நிரந்தரம். சமீபத்தில் பெரிய இன்னிங்ஸ் விளையாடாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் சரியான பாதையில் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது, சாம்பியன்ஸ் டிராபியில் நீங்கள் மற்ற அணிகளை கண்ணீரில் ஆழ்த்துவீர்கள். நேற்று நீங்கள் 3 சிக்ஸர் அடித்தது சிறந்ததாக இருந்தது, நான் என்னுடைய கணித வகுப்பில் அமர்ந்து போட்டியைப் பார்த்தேன், உங்கள் பேட்டிங் தரமாக இருந்தது.
வெறுப்பவர்கள் வெறுத்துவிட்டு போகட்டும், உங்கள் தலைமைத்துவம் உயர்ந்த நிலையில் இருக்கிறது. நீங்கள் களத்தில் சிறந்த குணம் கொண்டவர், ஒவ்வொரு வடிவத்திலும் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் வெற்றி பெற்றுள்ளீர்கள். நான் எப்போதும் உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன், உங்களுக்காகவே ஒவ்வொரு ஆட்டத்தையும் பார்க்கிறேன். தயவு செய்து ஒருபோதும் ஓய்வு பெறாதீர்கள், இந்தியாவிற்காக இன்னிங்ஸைத் திறக்க நீங்கள் உள்ளேவருவதை காணவில்லை என்றால் நான் எப்படி டிவியை இயக்குவேன் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.
நான் 15 வயதான நன்கு பேசக்கூடிய பையன். ஒரு விளையாட்டு ஆய்வாளராக வேண்டும் என்பதே எனது கனவு, நான் ராஜஸ்தான் ராயல்ஸுடன் இணைந்து இன்டர்ன்ஷிப்பை முடித்துள்ளேன். நீங்கள் எனக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்தால், உங்கள் மீதான விமர்சனங்களை விட்டுவிடுங்கள். நான் உங்களை நேசிக்கிறேன் ரோகித், எனக்கு தெரியும், நீங்கள் மிக விரைவில் உங்கள் திறமைக்கு திரும்புவீர்கள்” என்று எமோசனலாக எழுதியுள்ளார்.