34 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் வெற்றி! வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 137 மற்றும் 123 ரன்களில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.
1-0 என பாகிஸ்தான் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தான் ஸ்பின்னர் நோமன் அலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் பாகிஸ்தான் ஸ்பின்னராக வரலாறு படைத்தார்.
நோமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களுக்கு சுருண்டது. ஆனாலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியிருப்பது நோமன் அலியின் மகிழ்ச்சியை நீடிக்கவிடாமல் செய்துள்ளது.
1990-க்கு பிறகு முதல்முறையாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி..
முதல் இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்ட போதிலும், பாகிஸ்தான் அணி பெரிய பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. வெஸ்ட் இண்டீஸின் ஸ்பின்னர் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த பாகிஸ்தான் 154 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 244 ரன்கள் சேர்க்க, 254 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 133 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோமல் வாரிக்கன், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் மண்ணில் 34 ஆண்டுகளுக்கு பிறகு முதல் டெஸ்ட் வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் பதிவுசெய்து அசத்தியது. இதற்கு முன் 1990-ம் ஆண்டு கடைசி வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில் டிரோபியானது இரண்டு அணிக்கும் பகிரப்பட்டது.