’WCL-ல் இனி பாகிஸ்தான் பங்கேற்காது..’ இந்திய வீரர்கள் விளையாட மறுத்ததை தொடர்ந்து PCB அதிரடி முடிவு!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜென்ட்ஸ் டி20 லீக் தொடரானது இங்கிலாந்தில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கப்பட்ட தொடரில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ், இந்தியா சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் மற்றும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் பங்கேற்று விளையாடினர்.
முன்னாள் நட்சத்திர வீரர்களான யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், ஏபிடி வில்லியர்ஸ், பிரட் லீ, இயன் மோர்கன், ஷாகித் அப்ரிடி போன்ற பல வீரர்கள் பங்கேற்றதால் ரசிகர்களிடையே அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு நிலவியது.
இந்த சூழலில் நடைபெற்ற தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை காரணம் காட்டி இந்திய வீரர்கள் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். ஆனால் இந்திய அணி விலகியபோதும் இரண்டு அணிக்கும் சமமாக புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அரையிறுதிப்போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் விளையாட மறுத்தது பிரச்னையை பூதாகரமாக்கியது.
இந்த சூழலில் விளையாட்டின் உணர்வை மதிக்கவில்லை, போட்டியில் நேர்மை இல்லை என WCL-ஐ குற்றஞ்சாட்டியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி WCL தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விளையாட்டின் உணர்வு மறைக்கப்படும் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது..
பாகிஸ்தானுக்கு எதிராக பாரபட்சம் காட்டியதாக WCL-ஐ குற்றஞ்சாட்டியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டு உணர்வின் சாராம்சத்தையும், ஜென்டில்மேன் விளையாட்டு என்பதையும் அரசியலால் மறைக்கப்படும் தொடர்களில் இனி பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.
மேலும், WCL மூலம் செய்யப்பட்ட போட்டி ரத்து கிரிக்கெட் தகுதியை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட தேசியவாதக் கதையைத் திருப்திப்படுத்துவதற்காக செய்யப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கும் பாகிஸ்தான் வாரியம், செய்வதை எல்லாம் செய்துவிட்டு உணர்வுகளைப் புண்படுத்திவிட்டோம் என WCL மன்னிப்பு கோரியது கேலிக்குரியது என்று விமர்சித்தது.
உலகளாவிய கிரிக்கெட் மற்றும் ஆரோக்கியமான போட்டிகளுக்கு தாங்கள் மதிப்பளிக்காத தெரிவித்திருக்கும் அதே வேளையில், "விளையாட்டின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" போட்டிகளில் தங்கள் வீரர்களை பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் வாரியம் கூறியுள்ளது.