WCL | Ind - Pak போட்டி ரத்து.. புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ள மறுக்கும் பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதல் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் 2ஆவது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆயினும், இதுதொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், இந்த விஷயத்தைக் கடுமையாக விமர்சித்தார். எனினும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஏன் நடத்தப்படவில்லை என்பது குறித்து WCL, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் (ECB) விளக்கியுள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தற்போது மொத்தப் புள்ளிகளும் தங்களுக்கே வேண்டும் எனக் கோரியுள்ளன.
இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள WCL வட்டாரங்கள், "இந்திய சாம்பியன்ஸ் அணி மீது எந்தத் தவறும் இல்லை. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. ஏனெனில், இதில் பின்வாங்கியது இந்தியாதான். நாங்கள் அல்ல என்று கூறி புதிய பிரச்னையை எழுப்பியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பாகிஸ்தான் தரப்பில் கமில் கான், "நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்தால், அது தொடர்பான முடிவுகள் அப்போது எடுக்கப்படும். இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, இரண்டு புள்ளிகள் எங்களுக்கு வழங்கப்படும். மேலும் விதிகளின்படி, அந்த புள்ளிகளுக்கு நாங்கள் தகுதியானவர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.