‘இது காலா கில்லா’ ஒருநாள் தரவரிசைப் பட்டியல்.. ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்! கோலி எந்த இடம்?
பாகிஸ்தானுக்கு எதிரான சதத்தின் மூலம் ஐசிசி ஒருநாள் ஆடவர் பேட்ஸ்மேன்களுக்கானத் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் 5 இடங்களுக்குள் முன்னேறி இருக்கிறார் விராட் கோலி.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 5ஆவது லீக் போட்டி துபாயில் நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்களை மட்டுமே எடுத்தது. 242 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 42 ஓவர்களிலேயே எளிதாக வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் விராட் கோலி 111 பந்துகளில் சதமடித்து அசத்தியிருந்தார். அதுமட்டுமின்றி, ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்களை அடித்தவர் என்ற சச்சினின் சாதனையையும் சமன் செய்திருந்தார். டெஸ்ட்டில் அதிகபட்சமாக 51 சதங்களை சச்சின் அடித்திருந்த நிலையில், ஒருநாள் ஃபார்மேட்டில் 51 சதங்களை அடித்துள்ளார் விராட்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், ஒருநாள் ஆடவர் பேட்ஸ்மேன்களுக்கான முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள் மூன்றுபேர் உள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி விராட் மீண்டும் 5ஆவது இடத்திற்குச் சென்றுள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் 817 புள்ளிகளுடன் சுப்மன் கில் இருக்கிறார். தான் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள், 2 அரைசதங்கள் என தொடர்ச்சியான ஃபார்மில் இருக்கிறார் கில். அவரது ஃபார்ம் தொடர்ச்சியாக அவர் முதலிடத்தில் நீடிக்க உதவுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட 2 போட்டிகளில் 147 ரன்களைக் குவித்துள்ளார் கில்.
இரண்டாம் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் இருக்க மூன்றாம் இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். நான்காம் இடத்தில் தென்னாப்ரிக்காவின் க்ளாசன் இருக்க, ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. முதல் 10 இடங்களில் முன்னேற்றத்தை எட்டியுள்ள ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ஆவது இடத்திலுள்ளார். கேஎல் ராகுல் 2 இடங்கள் முன்னேறி 15 ஆவது இடத்தில் இருக்கின்றார்.
சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் காரணமாக அந்த அணியின் பல வீரர்களும் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பின்னணியைச் சந்தித்துள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் கூட 16 ஆவது இடத்திலிருந்து 20 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.