CBSE பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம்; உத்தரவு போட்ட தெலங்கானா அரசு!
தெலங்கானாவில் உள்ள CBSE, ICSE, IB பள்ளிகளில் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயம் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரிய இணைப்புப் பள்ளிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போதைய காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நிர்வாகங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. மற்றும் பிற வாரியங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு தெலுங்கு கற்பிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 2025 -26 கல்வியாண்டு முதல் தெலங்கானா மாநிலத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி பள்ளிகளில் இது கட்டாயமாக்க வேண்டும் என்று சுற்றரிக்கை தெரிவிக்கிறது. சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.பி. மற்றும் பிற வாரியங்களின் கீழ் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.