ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்pt web

துணிச்சல் ராணுவம் – கோழை அரசியல் தலைமை!

இன்னொரு யதார்த்தம் என்னவென்றால், அமெரிக்காவுடனும் பாகிஸ்தானுக்குள்ள (குறைந்தபட்சம் பாகிஸ்தான் ராணுவத்தின்) ‘பந்தம்’ வலுவாகவே தொடர்கிறது.
Published on

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை இறுதியாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது, இலக்குகள் எய்தப்பட்டுவிட்டன, வழக்கமான நிலைமை திரும்பிவிட்டது என்ற தோற்றத்தை (ஒன்றிய) ‘அரசு’ கடந்த வாரம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்த விவாதங்களின்போது ஏற்படுத்தியது. அப்படி அரசு நினைத்தால் அது முற்றிலும் தவறு. உண்மை என்னவென்றால், ராணுவம் மிகவும் கடினமானதொரு வேலையைச் செய்துகொண்டிருந்தபோதே அதனிடமிருந்த ‘பந்தை’ பாதியிலேயே பறித்துவிட்டது அரசு!

பஹல்காம், ப.சிதம்பரம்
பஹல்காம், ப.சிதம்பரம்எக்ஸ் தளம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பல தவறான அனுமானங்களை உடைத்து எறிந்துவிட்டது: ‘பாகிஸ்தானுடன் (இந்தியா) போர் செய்வது எளிது, வழக்கமான போர் முறையில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும், இந்தியாவுக்கு உலக அரங்கில் நண்பர்கள் ஏராளம், பாகிஸ்தானுக்கு ஒருவருமில்லை’ என்பவையே அந்த அனுமானங்கள்.

இந்த விவகாரத்தில் ராணுவத் தலைமை மிகவும் போற்றத்தக்க முன்மாதிரியாகச் செயல்பட்டது. ‘செயல்படும் சுதந்திரம் வேண்டும்’ என்று கேட்டு அதைப் பெற்றது. முதல் தாக்குதலை நடத்தும் படை என்ற வகையில் இந்திய ராணுவம் சில சாதகங்களைத் தனதாக்கிக் கொண்டது: பயங்கரவாதிகளுக்கு முகாமும் படையணிகளும் தந்து அவற்றுக்குப் பாதுகாப்பு அளித்த 9 இடங்கள் மீது நடத்திய தாக்குதலில், தகவல் தொடர்பு உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புகள் நாசமாக்கப்பட்டன, பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக சுதாரித்துக் கொண்டது. மே 7-8 ஆகிய நாள்களில் அது எதிர் தாக்குதலை நடத்தியது, சீனத்தில் தயாராகும் ‘ஜே-10’ ரக போர் விமானங்களையும் சீனம் தயாரிக்கும் ‘பிஎல்-15’ ரக ஏவுகணைகளையும் துருக்கி(யே) விற்ற டிரோன்களையும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியது.

வியூக வகுப்பில் சில தவறுகளைச் செய்திருப்பதை உணர்ந்த இந்திய ராணுவத் தலைமை, தனது தாக்குதலை சற்றே இடைநிறுத்திக் கொண்டு புதிய உத்தியை வகுத்தது. அதுதான் சிறந்த தலைமை. மே 9-10 நாள்களில் அது மீண்டும் தனது தாக்குதலை வேறு வகையில் நிகழ்த்தியது, பாகிஸ்தான் ராணுவத்தின் 11 விமானதளங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றைக் கணிசமாக சேதப்படுத்தியது. இந்திய ராணுவமும் இந்த மோதலில் வேறு வழியில்லாமல் ‘சில இழப்புகளையும்’ சந்தித்தது, இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியும் துணைத் தலைமை தளபதியும் இந்த ‘இழப்புகள்’ பற்றிய தகவல்களை ஒப்புக்கொண்டனர். இதுவும் சிறந்த தலைமையின் பண்புதான்.

இந்த விவகாரத்தில் ‘அரசியல் தலைமை’ எப்படி முற்றிலும் வேறுபட்டு நடந்துகொண்டது என்று பார்ப்போம். ‘தவறுகள்’ நடந்ததையும் ‘இழப்புகள்’ ஏற்பட்டதையும் அது ஒப்புக்கொள்ளவேயில்லை. மணலில் தலை புதைத்துக் கொண்ட நெருப்புக் கோழியைப்போல, தன்னைச் சுற்றி நடந்தவற்றை உண்மையென்று ஒப்புக்கொள்ள மனமில்லாமல் - ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இறுதியாகவும் உறுதியாகவும் வெற்றி பெற்றதாகவே அது இன்னமும் மார் தட்டுகிறது. இந்த நடவடிக்கையால் உறுதியான வெற்றி ஏற்பட்டுவிட்டது என்றால் அதன் சாதகங்களை ஏன் அது மேலும் நீட்டித்துக் கொள்ளவில்லை, ஏன் மேலும் பல ராணுவ ரீதியிலான லாபங்களை அடையவில்லை, பாகிஸ்தானுக்கு நெருக்குதல் தந்து ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சலுகைகளைக் கேட்டுப் பெறவில்லை? பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், போர் நிறுத்தத்துக்கு முதல் அழைப்பை விடுத்த உடனேயே ஏன் இந்திய அரசு எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் அதை அப்படியே ஏற்றது? இந்தக் கேள்விகளுக்கு அரசிடமிருந்து பதில்கள் இல்லை. (மிகவும் கொண்டாடப்பட்ட தனித்துவமான ராணுவ வெற்றி எதுவென்றால், வங்கதேச விடுதலையின்போது 1971 டிசம்பர் 16-ல் பாகிஸ்தான் ராணுவத் தளபதி நியாஜி இந்திய ராணுவத் தளபதி லெப். ஜெனரல் அரோராவிடம் டாக்கா நகரில் சரண் அடைந்ததுதான்.)

கள உண்மைகள்

அரசியல் தலைமையானது, களத்தில் நிலவும் உண்மைகளை ஏற்று ஒப்புக்கொள்ளாது: பாகிஸ்தானும் சீனமும் வலிமையான ராணுவ – அரசியல் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. புதிய தலைமுறை போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது சீனம். உண்மையான போர்க் களத்தில் தனது ஆயுதங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று சோதித்துப் பார்க்க இந்த வாய்ப்பை சீனம் பயன்படுத்திக் கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவக் கூட்டு மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. அரசியல் அரங்கிலோ - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுப்பதாக பாராட்டினார். பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடமிருந்து பாகிஸ்தான் பெருந்தொகையைக் கடனாகப் பெறுவதற்கு சீனம் ஆதரவாக வாக்களித்தது.

இன்னொரு யதார்த்தம் என்னவென்றால், அமெரிக்காவுடனும் பாகிஸ்தானுக்குள்ள (குறைந்தபட்சம் பாகிஸ்தான் ராணுவத்தின்) ‘பந்தம்’ வலுவாகவே தொடர்கிறது. பாகிஸ்தான் தரைப்படை தலைமைத் தளபதியான ஆசிம் முனீரை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை விருந்துக்கு வரவழைத்து கௌரவப்படுத்தியிருக்கிறார். ஒரு நாட்டின் தலைவர் அல்லது அரசியல் தலைவருக்கு மட்டுமே வழங்கப்படும் கௌரவம் தரைப்படை தளபதியாக மட்டும் இருப்பவருக்கு வழங்கப்பட்ட முன்மாதிரி அமெரிக்காவில் இல்லை. தன்னுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு போரை நிறுத்திக் கொண்டதற்காக முனீரைப் பாராட்டியிருந்தார் டிரம்ப். அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான போரை நிறுத்தியதில் தனக்குள்ள முக்கியப் பங்கையும் அவர் உறுதி செய்தார்.

Trump
TrumpPTI

இந்திய எதிர்க் கட்சித் தலைவர்களை மறுத்துப் பேசவும், வசை பாடவும் கிடைக்கும் ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்தும் பிரதமரும் (மோடி) உள்துறை அமைச்சரும் (அமித் ஷா) அமெரிக்க அதிபர் டிரம்பையோ சீன அதிபர் ஜி ஜின்பிங்கையோ வேறு வெளிநாட்டு அமைச்சர்களையோ மறுத்தோ, வசைபாடியோ பேசும் துணிவு பெற்றதில்லை.

ஒட்டுமொத்தமான உண்மை நிலவரம் என்னவென்றால் பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆதரிப்பதில் அமெரிக்காவும் சீனமும் ஒரே தரப்பிலிருந்துகொண்டு செயல்படுகின்றன. தங்களுக்கு இடையில் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவிய போதிலும் பாகிஸ்தானை ஆதரிக்கவும் அரவணைக்கவும் அமெரிக்காவும் சீனமும் முடிவெடுத்துவிட்டன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலை உலகம் முழுவதும் சுற்றிவந்து எடுத்துரைத்து அனுதாபம் பெற முயன்ற இந்தியத் தலைமைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த நாடுகள்கூட - இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்தன, பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்தன, இதைச் செய்த பாகிஸ்தானை எந்த நாடும் பெயர் சொல்லி கண்டிக்கவேயில்லை. இந்த உண்மையை இந்திய அரசியல் தலைமை ஏற்க மறுப்பதுடன் பாகிஸ்தானுக்கு நண்பர்களே இல்லை என்றும் இந்தியாவுக்கு உலகம் முழுவதிலும் நண்பர்கள் இருப்பதைப் போலவும் தவறான நம்பிக்கையிலேயே வாழ்கிறது.

இந்திய மண்ணில் ஆதரவு

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான ‘அனைத்து அம்சங்களையும் தகர்த்துவிட்டதாக’ இந்திய அரசியல் தலைமை தவறான அனுமானத்தில் பேசுகிறது. உண்மை நிலவரம் வேறு. ஏப்ரல் 22-ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய உள்துறை அமைச்சகம் 2025, ஏப்ரல் 24-ல் தெரிவித்த தகவல்கள் வருமாறு: (2024 ஜூன் முதல் 2024 மே வரையிலான காலத்தில் மட்டும் நிகழ்ந்தவை)

Ø 1,643 பயங்கரவாத தாக்குதல்கள்

Ø 1,925 ஊடுருவல் முயற்சிகள்

Ø 726 ஊடுருவல்கள்

Ø 576 பாதுகாப்புப் படை வீரர்கள் மரணம்.

atal bihari vajpayee
atal bihari vajpayee

அடல் பிஹாரி வாஜ்பாய் (1998-2004), மன்மோகன் சிங் (2004-14) பதவிக்காலங்களிலும் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்ததையும் ஏராளமானோர் இறந்ததையும் மறுக்கவே முடியாது.

பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்று ஊடுருவும் பயங்கரவாதிகள் மட்டுமல்லாது, இந்தியாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும்தான் காரணம் - குறிப்பாக காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். பல தருணங்களில் இரு தரப்பினரும் சேர்ந்தே செயல்பட்டுள்ளனர், தாக்கியுள்ளனர், பரஸ்பரம் உதவிக் கொள்கின்றனர். பஹல்காம் படுகொலைகளுடன் தொடர்புள்ளவர்கள் என்று கூறி இந்த ஆண்டு ஏப்ரல் 26-இல் பல வீடுகளை அரசு இடித்துத் தள்ளியது, அந்த வீடுகளின் உரிமையாளர்கள் இந்தியர்களே. பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு உணவும் புகலிடமும் அளித்த குற்றச்சாட்டில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த ஜூனில் இரு இந்தியர்களைக் கைது செய்தது. அந்த இரு பயங்கரவாதிகளும் ஜூலை 27-28-இல் நடந்த தாக்குதலின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்திய மண்ணையே சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த காலங்களிலும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மும்பை மாநகரில் 2006-ல் புறநகர் மின்சார ரயில்களில் தாக்குதல், 2008-ல் தாஜ்மஹால் ஹோட்டல் மீது தாக்குதல், 2011-ல் ஜவேரி பஜார் பகுதியில் தாக்குதல். 2006-ம் ஆண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இந்தியக் குடிமக்களான பயங்கரவாதிகள், 2008 தாக்குதல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய ஊடுருவல்காரர்களால் மேற்கொள்ளப்பட்டது, 2011 தாக்குதல்கள் இந்தியாவைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டவை. எனவேதான் கூறுகிறேன், இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு சாதகமான ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டுவிட்டதாக அரசு கூறுவது பெரும் தவறு.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல் முகநூல்

உளவுத்துறை தனது கடமையில் தவறியதாலும் பாதுகாப்புப் படையினர் போதிய எண்ணிக்கையில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படாததாலும்தான் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டனர். (ஒன்றிய) அரசில் ஒருவர் கூட இந்தக் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்கவே இல்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ராணுவத்துக்குக் கிடைத்துள்ள ஆதாயம், பாகிஸ்தானுக்கு ஓரளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்; அமெரிக்கா – சீனத்துக்கு எதிராக (இந்திய) அரசியல் தலைமை கடைப்பிடிக்கும் கோழைத்தனம், இந்த நடவடிக்கையில் கிடைத்த ஆதாயத்தை நீர்த்துப் போக வைத்து பாகிஸ்தானுக்கு உற்சாகத்தையே தரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com