பாகிஸ்தான் தோல்விக்கு என்ன காரணம்..? எல்லோரையும் திகைக்க வைத்த கேப்டன் ரிஸ்வான் பதில்!
1996 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு கிட்டத்தட்ட 3 தசாப்தங்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரை பாகிஸ்தான் தலைமைஏற்று நடத்துகிறது. இதனால் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடும், உற்சாகத்தோடும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வரவேற்றனர்.
நாட்டில் நிதிப்பிரச்னை இருந்துவரும்போதும் பாகிஸ்தான் அணி பங்குபெறாத போட்டியில் கூட ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். லாகூரில் கடாஃபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதலின் போது கிட்டத்தட்ட மைதானம் முழு அளவில் நிரம்பியிருந்தது. 700 ரன்கள் குவிக்கப்பட்ட அந்தபோட்டி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த சூழலில் தான் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் நடக்கும் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. அதனைத்தொடர்ந்து நடக்கவிருந்த வங்கதேசத்திற்கு எதிரான கடைசி லீக் போட்டியும் மழையால் ரத்துசெய்யப்பட்டதால் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது பாகிஸ்தான்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், சோயப் அக்தர், முகமது ஹஃபீஷ், கம்ரான் அக்மல் என பல வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். விமர்சனங்களை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடுகளுக்கான காரணத்தை கேப்டன் ரிஸ்வான் வெளிப்படுத்தியுள்ளார்.
திகைக்க வைத்த ரிஸ்வானின் பதில்..
பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு குறித்து விளக்கம் அளித்திருக்கும் முகமது ரிஸ்வான், ”சொந்த மண்ணில் நாட்டு மக்களுக்கு முன்னதாக சிறப்பாக செயல்படவே நினைத்தோம். எதிர்ப்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால் எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என தவறுகளை ஒப்புக்கொண்டார்.
ஆனால் இளம்வீரர் சையிம் ஆயூப் இல்லாதது அணியின் லைன்-அப்பை குலைத்துவிட்டதாக கூறிய அவர், “கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வேயில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர், திடீரென காயமடைந்து வெளியேறியது அணியின் பேட்டிங் வரிசையை சிதைத்துவிட்டது.
காயம் காரணமாக எங்களுடைய முக்கியமான வீரர்கள் சையின் ஆயுப் மற்றும் ஃபகார் ஜமான் இல்லாமல் போனது பாதகமாக அமைந்தது. ஆனால் அதற்காக நடந்ததை சரியென கூறவில்லை, இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்” என முக்கியமான காரணத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் சோகம் என்னவென்றால் சையிம் ஆயுப் சிறப்பான ஃபார்மில் இருந்தாலும் 2024-ல் அறிமுகம் பெற்ற 22 வயது வீரர், இதுவரை 9 இன்னிங்ஸில் 3 சதங்கள் உட்பட 515 அடித்துள்ளார். அனுபவமுள்ள வீரர்கள் அணியில் இருந்து சிறப்பாக செயல்படாமல், அழுத்தமான தொடரில் இளம்வீரர் இல்லாதது அணியின் பேட்டிங்கை குலைத்துவிட்டதாக தெரிவித்திருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று புரியவில்லை.
மாறாக ஃபகார் ஜமான் 2023-க்கு பிறகு 2024-ஆண்டில் ஒரு ஒருநாள் போட்டிகளில் கூட விளையாடவில்லை, இப்படி அணியில் நீண்டகாலம் இல்லாதவர்களை பெரிய காரணம் என முகமது ரிஸ்வான் பட்டியலிட்டுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் எங்கள் மீது நாங்களே அதிகமான அழுத்தத்தை உருவாக்கிக்கொண்டோம் என தெரிவித்திருக்கும் ரிஸ்வான், தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.