’இனி ஸ்டேடியங்கள் நிரம்பாது.. ஸ்பான்சர்கள் கிடைக்காது’! மிகப்பெரிய நிதிநெருக்கடியை சந்திக்கும் PAK!
1996 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு கிட்டத்தட்ட 3 தசாப்தங்கள் கழித்து ஒரு ஐசிசி தொடரை பாகிஸ்தான் தலைமைஏற்று நடத்துகிறது. இதனால் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடும், உற்சாகத்தோடும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வரவேற்றனர்.
நாட்டில் நிதிப்பிரச்னை இருந்துவரும்போதும் பாகிஸ்தான் அணி பங்குபெறாத போட்டியில் கூட ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். லாகூரில் கடாஃபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதலின் போது கிட்டத்தட்ட மைதானம் முழு அளவில் நிரம்பியிருந்தது. 700 ரன்கள் குவிக்கப்பட்ட அந்தபோட்டி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த சூழலில் தான் விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் நடக்கும் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. இது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக இனி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளின் போது பாதி மைதானம் கூட ரசிகர்களால் நிரம்பாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இனி ஸ்பான்சர்கள் கிடைப்பது கடினம்..
பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியதால், இனி மைதானத்தில் போட்டியை பார்க்க ரசிகர்களை வரவைப்பது மிகவும் கடினம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.
அந்த அறிக்கையின் படி, ”பாகிஸ்தான் விளையாடாத ஒரு போட்டியை மக்கள் வரவேற்று ரசிப்பதைப் பார்க்க உற்சாகமான அனுபவமாக இருந்தது. ஆனால் இப்போது மீதமுள்ள போட்டிகளை காண மக்கள் மைதானத்திற்கு வருவதை உறுதி செய்வதே சவாலாக இருக்கப்போகிறது. ஏனென்றால் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய நிகழ்வை நாங்கள் நடத்துகிறோம். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவாகவே வெளியேறியிருப்பது ரசிகர்களின் ஏமாற்றத்தை பெற்றுள்ளது” என்று PCB அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், போட்டியை நடத்துவதற்கான தொகை, டிக்கெட் விற்பனை என எங்களுக்கு வரவேண்டிய நிதி ஐசிசியிடம் இருந்து கிடைத்துவிடும். ஆனால் மக்களிடம் கிரிக்கெட் தொடர் நம்பிக்கையை இழந்தால், பின்நாளில் இங்கு தொடரை நடத்துவது கேள்விக்குறியாகிவிடும். அதுமட்டுமில்லாமல் காலியான மைதானங்களை ஒளிபரப்பாளர்கள் ஒளிபரப்பினால், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான ஸ்பான்சர்கள் கிடைப்பதிலும் பெரிய பாதிப்பு ஏற்படும்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீதும் ”கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் என மைதானங்களை தயார்செய்வது மட்டுமல்ல, இறுதிப்போட்டிக்கு செல்லக்கூடிய ஒரு அணியை தயார்செய்வதும் முக்கியமானது” என கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை மேலும் கூறுகிறது.
இதையெல்லாம் தாண்டி உலக கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களை கொண்டிருந்த உலகத்தரம் வாய்ந்த ஒரு அணி, இவ்வாறு படுமோசமான நிலைக்கு சென்றிருப்பது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.