வெளியேறிய பாகிஸ்தான்.. ”பிசிபி தலைவரை நீக்குங்கள்” - எதிர்க்கட்சித் தலைவர்!
பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 19ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணமாக பிசிசிஐ கேட்டுக்கொண்டதன் பேரில் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், 1996 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஐசிசி இது என்பதால், சொந்த அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த அணி வெறும் 5 நாட்களிலேயே அரையிறுதிக்குத் தகுதிபெறாமலேயே வெளியேறியது. தவிர, இந்திய அணியிடம் அவ்வணி தோல்வியடைந்ததும் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மூத்த தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை அவ்வணி மீது வைத்து வருகின்றனர். மூத்த கிரிக்கெட் வீரர்களைத் தவிர, வீராங்கனைகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை விமர்சித்து வருகிறனர். அந்த வகையில் அந்நாட்டின் முன்னாள் வீராங்கனை சனா மிர், “தற்போதைய பாகிஸ்தான் அணியை 2007 டி20 உலகக் கோப்பை வென்ற எம்எஸ் தோனி, 2009 டி20 உலகக் கோப்பை வென்ற யூனிஸ் கான் போன்ற ஜாம்பவான் கேப்டன்களால் கூட வெற்றிப்பாதையில் அழைத்து வர முடியாது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மறுபுறம், முன்னாள் வீரரும், முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கானும் விமர்சித்துள்ளார். அவர், ”முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு பிடித்தவர்களுக்குக் கொடுக்கப்படும்போது கிரிக்கெட் அழிந்துபோகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி பதவி விலக வேண்டும். ஆனால், அதை அவர் செய்யமாட்டார்” எனத் தெரிவித்திருந்தார். தற்போது இதே கருத்தை பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியைச் சேர்ந்தவருமான உமர் அயூப்பும் முன்வைத்துள்ளார். அவர், “நடந்து வரும் போட்டியில் அணியின் மோசமான செயல்பாட்டிற்கு மொஹ்சின் நக்வியின் செயல்பாடுகளே காரணம். மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் அணி தோல்விகளைச் சந்தித்து வருவதால் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணி, கடந்த இரண்டு ஐசிசி தொடர்களில் சிறப்பாக செயல்பட முடியாத நிலையில் வெளியேறி உள்ளது. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையில், முதல் சுற்றிலேயே வெளியேறி இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையிலும் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது