”அந்த இலங்கை வீரர் என்ன சொன்னார் என்று தெரியாம பேசாதீங்க..” வைரலாகும் ஜெய்ஸ்வால் கமெண்ட்!
கொலம்போவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அசிதா பெர்னாண்டோவால் கிளீன் பவுல்டான ஜெய்ஸ்வால், வாக்குவாதம் தீவிரமடைந்தபோது ஹெல்மெட்டால் பெர்னாண்டோவின் நெற்றியில் மோதிய சம்பவம் சர்ச்சை கிளப்பியது. கைகலப்புக்கு இடையே வீரர்கள் நடுவேற, ஐசிசி தண்டனை குறித்து கேள்விகள் எழுந்தன. இதேவேளை, கிரிக்பஸ் வீடியோவுக்கு ஜெய்ஸ்வால் எழுதிய கருத்து ரசிகர்களை மேலும் இரண்டுபடுத்தியது.
கொலம்போவில் நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை பவுலர் அசிதா பெர்னாண்டோ மற்றும் இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
போட்டியின் 17வது ஓவரின் கடைசிப் பந்தில், 45 ரன்கள் அடித்திருந்த ஜெய்ஸ்வாலை க்ளீன் பவுல்ட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தபோது பந்துவீச்சாளருக்கும் பேட்ஸ்மேனுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால், பல இலங்கை வீரர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டனர். மறுபக்கம் இருந்த தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வாலை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் இந்திய தொடக்க ஆட்டக்காரர் பெர்னாண்டோவை நோக்கி வேகமாக நகர்ந்தார்.
இரு வீரர்களும் நேருக்கு நேர் சந்திப்பதற்கு முன்பு வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டனர். இந்த மோதலின்போது ஜெய்ஸ்வால் தன்னுடைய ஹெல்மெட்டை கொண்டு பெர்னாண்டோவின் நெற்றியில் மோதினார். மேலும், இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வாவும் மற்ற வீரர்களும் தலையிட்டு அவர்களைப் பிரிப்பதற்கு முன்பு, இருவருக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.
இந்தசூழலில் தான் மைதானத்தில் நடந்த மோதல் குறித்து, கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே இடம்பெற்ற, 'ஜெயஸ்வால் வரம்பு மீறிவிட்டாரா?' என்ற தலைப்பிலான வீடியோ பதிவு ஒன்றை கிறிக்பஸ் வெளியிட்டிருந்தது. அந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரு வீரர்களுக்கும் இடையே என்ன பேசப்பட்டது என்று அறியாமல் வரம்பு மீறிவிட்டதாக நம்பிவிட வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.
அந்தபதிவில் கமெண்ட் செய்திருக்கும் ஜெய்ஸ்வால், “அவர் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், தயவுசெய்து தீர்ப்பு வழங்காதீர்கள். யாராவது வரம்பு மீறினால், இந்தியா எதிர்த்துப் போராடி பதிலடி கொடுக்கும் என்பதை நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார். மைதானத்தில் மட்டுமில்லாமல் மைதானத்திற்கு வெளியேயும் ஜெய்ஸ்வால் இப்படி நடந்துகொண்டிருப்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
2 வீரர்களுக்கும் ஐசிசி தண்டனை..
இந்தமோதல் எதிர்ப்பார்த்ததை விட தீவிரவாக இருந்த நிலையில், ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகள் தடை முதல் வாழ்நாள் தடை வரை தண்டனை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்தசூழலில் இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு வீரர்களும் தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொண்டதால், போட்டிக்கட்டணத்தில் 25% அபராதம் மற்றும் ஒரு தகுதிகுறைப்பு புள்ளியையும் ஐசிசி தண்டனையாக வழங்கியுள்ளது. அடுத்த 24 மாதத்தில் 4 முறை தகுதிகுறைப்பு நடவடிக்கையில் சிக்கினால் அடுத்து ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

