21 வயதில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை! வரலாற்று வெற்றியை பதிவுசெய்த இந்தியா!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுற்ற நிலையில், 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா டி20 தொடரை வெல்வது இதுவே முதல்முறை.
அதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கிய நிலையில், இந்தியா முதல் போட்டியிலும் இங்கிலாந்து இரண்டாவது போட்டியிலும் வென்று தொடர் 1-1 என சமனில் நீடித்தது.
இந்த சூழலில் நேற்று இரவு நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
21 வயதில் சாதனை படைத்த கிராந்தி..
பரபரப்பாக தொடங்கிய 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 318 ரன்கள் குவித்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 பவுண்டரிகள் அடித்து 82 பந்தில் சதமடித்து அசத்தினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய 7வது சதமாகும்.
இந்நிலையில் 319 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் 21 வயது இந்திய வேகப்பந்துவீச்சாளர் கிராந்தி கவுட். கிராந்தியின் அபாரமான பந்துவீச்சால் 8 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.
ஆனால் அதற்குபிறகு கம்பேக் கொடுத்த கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் மற்றும் எம்மா லாம்ப் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. எம்மா அரைசதமடித்து அசத்த, 11 பவுண்டரிகளை விரட்டி நிதானமாக ஆடிய நாட் ஸ்கைவர் 98 ரன்கள் அடித்து சதத்தை நோக்கி முன்னேறினார். அனுபவ பந்துவீச்சாளர் தீப்தி ஷர்மா 98 ரன்னில் நாட் ஸ்கைவரை வெளியேற்ற, இந்தியா கம்பேக் கொடுத்தது.
அதற்குபிறகு தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கிராந்தி இந்தியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். 3வது போட்டியை வென்ற இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இங்கிலாந்து மண்ணில் டி20 தொடர், ஒருநாள் தொடர் இரண்டையும் இந்தியா வெல்வது இதுவே முதல்முறை. 6 விக்கெட்டுகளை வீழ்த்திய கிராந்தி, இந்தியாவிற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
சதமடித்து பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை வாங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத், தன் விருதை 21 வயதில் சாதனை படைத்த கிராந்திக்கு வழங்கி உத்வேகப்படுத்தினார்.