தந்தை ’முகமது நபி’ வீசிய பந்து.. சிக்சருக்கு அனுப்பிய மகன்.. கிரிக்கெட் களத்தில் சுவாரசியம்!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் ஷ்பகீசா கிரிக்கெட் லீக் தொடரின் 10வது சீசன் தற்போது நடந்துவருகிறது. இது கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இன்று நடந்துவரும் 2025 ஷ்பகீசா கிரிக்கெட் லீக் (SCL) தொடரின் போட்டியில், அமோ ஷார்க்ஸ் மற்றும் மிஸ் ஐனக் நைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இந்தப் போட்டியில் சுவாரசியமான விசயமாக மிஸ் ஐனக் நைட்ஸ் அணிக்காக ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் முகமது நபியும், அமோ ஷார்க்ஸ் அணியில் அவருடைய 18 வயதுடைய மகன் ஹசன் ஐசாகில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு விளையாடினர்.
இப்போட்டியில் தந்தை முகமது நபிக்காக கிரிக்கெட் களத்தில் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி ஹசன் ஐசாகில் மிரட்டிவிட்டார்.
36 பந்தில் 52 ரன்கள் விளாசிய ஐசாகில்..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் ஹசன் ஐசாகில் விளையாடிய அமோ ஷார்க்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஹசன் ஐசாகில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய போதும், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
ஆனால் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வெளுத்துவாங்கிய 18 வயதான ஐசாகில், தன்னுடைய தந்தை முகமது நபி வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு மிரட்டிவிட்டார். இதுதான் அவர்கள் இருவரும் ஒரு பெரிய லீக்கில் எதிர்கொள்ளும் முதல் போட்டியாகும். அப்படியான சந்தர்ப்பில் தந்தையின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஐசாகில்லின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
36 பந்தில் 52 ரன்கள் விளாசிய ஐசாகில்லின் மிரட்டலான ஆட்டத்தால் அமோ ஷார்க்ஸ் அணி 162 ரன்கள் சேர்த்தது.
முதல் இன்னிங்ஸிக்கு பிறகு தந்தைக்கு எதிராக சிக்சர் அடித்தது குறித்து பேசிய மகன் ஐசாகில், “நான் நபியை பவர் பிளேயில் வரச் சொன்னேன், ஆனால் அவர் மிடில் ஓவர்களில் வந்தார். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். அந்த ஒரு சிக்ஸரிலிருந்து நான் என்னைக் காப்பாற்றிக் கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.