இங்கிருந்து இந்திய அணி WTC இறுதிப்போட்டிக்கு எப்படி செல்ல முடியும்? இந்த 3 வழிகள்தான் இருக்கு!
2024-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்றம், இறக்கம் என சென்று கொண்டிருந்த தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகள் தான் இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற நிலையே இருந்துவந்தது.
ஆனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணிக்காக கதவை திறந்துவிட்டது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட தென்னாப்பிரிக்கா அணி வங்கதேசத்தை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய மண்ணில் தொடரை கைப்பற்றியது.
மீதமிருக்கும் போட்டிகளை எல்லாம் வென்ற தென்னாப்பிரிக்கா தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
முதல் இடத்தை தென்னாப்பிரிக்கா சீல் செய்த நிலையில், இரண்டாவது இடத்திற்கு நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே வலுவான போட்டி நிலவி வருகிறது.
WTC இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் என்ன?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4வது டெஸ்ட் போட்டியில் மோதிவரும் நிலையில், இரண்டு அணிகளில் இந்தியாவிற்கு மீதம் ஒரு போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு 3 போட்டியும் மிச்சம் உள்ளன.
இந்நிலையில் இந்தியா WTC இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்..
1. BGT: இந்தியா 3-1 என வெற்றி
பார்டர் கவாஸ்கர் தொடரின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற விகிதத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெல்லும் பட்சத்தில் நேரடியாக WTC இறுதிப்போட்டிக்கு செல்லும்.
அதற்கு இந்திய அணி முதலில் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்யவேண்டும்.
2. BGT: இந்தியா 2-1 என வெற்றி
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியா 2-1 என வெல்லும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவை இலங்கை அணி ஒரு போட்டியிலாவது டிரா செய்யவேண்டும்.
3. BGT: 1-1 அல்லது 2-2 என தொடர் சமன்
பார்டர் கவாஸ்கர் தொடரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சமன்செய்யும் பட்சத்தில், ஒரு போட்டியிலாவது இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அதேநேரம் தோல்வியையும் இலங்கை சந்திக்க கூடாது. அதவாது ஒரு வெற்றி, ஒரு டிராவை இலங்கை செய்யவேண்டும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லும் பட்சத்தில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.