மகளிர் உலகக்கோப்பை | 3 போட்டிகளே மீதம்.. அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா? வாய்ப்புகள் என்ன?
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு அரையிறுதிக்கு செல்லும் இந்தியாவின் வாய்ப்பு சவால் நிறைந்ததாக மாறியுள்ளது.
2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையானது செம்படம்பர் 30-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதிவரை, இந்தியா மற்றும் இலங்கை மைதானங்களில் நடைபெறுகிறது.
விசாகப்பட்டினம், இந்தூர், குவஹாத்தி, பெங்களூரு மற்றும் கொழும்பு முதலிய 5 நகரங்களில் 31 போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் கோப்பைக்காக ‘இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம்’ முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
2 தோல்வி.. கவலையில் இந்தியா!
இந்தியாவிற்கு 12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை திரும்பியதால், ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி இம்முறை கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்துவருகிறது. போதாக்குறைக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பிரதிகா, ஹர்லீன் தியோல், ரிச்சா கோஸ், ஹர்மன்ப்ரீத் போன்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகமானது.
ஆனால் 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக கையில் இருந்த போட்டியை தவறவிட்டது. அதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 330 ரன்களை குவித்தபோதும் மோசமான ஃபீல்டிங், சுமாரான பவுலிங் போன்றவற்றால் தோல்வியை தழுவியது.
அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோல்வியை கண்ட இந்திய அணி அடுத்த 3 போட்டிகளில் இரண்டில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இருக்கும் வாய்ப்புகள் என்ன?
2025 மகளிர் உலகக்கோப்பையின் விதிமுறையின் படி 8 அணிகள் தங்களுடைய 7 எதிரணிகளுடன் ஒருமுறை மோதும், லீக் போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்யும்.
பின்னர் டாப் 4 அணிகளுக்கு இடையே அரையிறுதிப்போட்டிகள் நடைபெற்று இரண்டு அணிகள் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இந்தசூழலில் 7 லீக் போட்டிகளில் இந்தியா 4 போட்டிகளில் விளையாடி 2 தோல்விகளை சந்தித்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் பலம்வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்தியா அடுத்தப்போட்டியில் எதிர்கொள்கிறது. 3 போட்டியில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி வலுவான அணியாக விளையாடிவருகிறது.
மற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா, இறுதி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. 3 போட்டியில் குறைந்தது இரண்டு போட்டியிலாவது வெற்றியை பெறவேண்டும்..
முதலிரண்டு இடங்களை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் நிரம்பும் நிலையில் இருப்பதால், 3வது மற்றும் 4வது இடத்திற்கு தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து 3 அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. நியூசிலாந்து அணி இந்தியாவை விட ரன்ரேட் குறைவாக இருப்பதால் அவர்களை வெல்லவேண்டியது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தினால் அவர்களுடைய அரையிறுதி வாய்ப்பு பிரகாசனமானதாகவே உள்ளது.
ஒருவேளை இலங்கை, பாகிஸ்தான் அணிகள் வெற்றிகளை பெற்றால் போட்டியில் பல கோணங்கள் ஏற்படும். அனைத்தும் ரன்ரேட்டை பொறுத்த குவாலிஃபிகேசனாக மாறும். எப்படியும் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தும் யுக்தியோடு களமிறங்கும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.