அபிஷேக், சஞ்சு, திலக் 3 பேரின் தரமான கம்பேக்.. 256 ரன்கள் குவித்து இந்தியா சாதனை!
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா ஜிம்பாப்வே அணியை எதிர்த்து 256 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அபிஷேக், சஞ்சு, திலக் ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு இரண்டாவது அதிகபட்ச டோட்டலை வழங்கியது. இந்த வெற்றி இந்தியாவிற்கு அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, சொந்தமண்ணில் தொடரை நடத்திய இலங்கை முதலிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பில் வாழ்வா சாவா நிலையில் உள்ளன.
முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா -3 ரன்ரேட் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தசூழலில் மீதமிருக்கும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெறவேண்டிய நிலை உருவானது.
இந்நிலையில் இன்றைய சூப்பர் 8 போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டு விளையாடுகிறது இந்திய அணி.
256 ரன்கள் குவித்த இந்தியா!
சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் இருவரும் ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இணைக்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 சிக்சர்கள் 1 பவுண்டரி என அதிரடியாக தொடங்கினார். சாம்சன் 24 ரன்களில் வெளியேறினாலும், மறுமுனையில் ஃபார்மிற்கு திரும்பிய அபிஷேக் சர்மா 4 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் உடன் 30 பந்தில் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.
இஷான் கிஷன் 24 பந்தில் 38 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 33 ரன்கள் என அடித்து அசத்த, கடைசிவரை களத்தில் நின்ற ஹர்திக் பாண்டியா 23 பந்தில் 50 ரன்களும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்களும் அடித்து மிரட்டினர். 20 ஓவரில் 256 ரன்களை குவித்த இந்திய அணி, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச டோட்டலை பதிவுசெய்து சாதனை படைத்தது.

