இன்று கடைசி டெஸ்ட்.. தொடரை சமன்செய்யுமா இந்தியா? அணியில் 4 மாற்றங்கள்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் விளையாடிவருகிறது.
முதல் 4 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் இந்தியா களம்காண உள்ளது.
கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி இன்று ஓவலில் நடக்கவிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தமாக 4 மாற்றங்களை செய்துள்ளது இங்கிலாந்து அணி.
அதேபோல இந்திய அணியும் 4 மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பும்ரா, பண்ட் OUT.. ஆகாஷ் தீப், கருண் நாயர் IN!
வெளியாகியிருக்கும் தகவலின் படி 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 மாற்றங்களை செய்யவிருக்கிறது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்றும், அதேபோல பணிச்சுமை காரணமாக ஜஸ்பிரித் பும்ராவும் இடம்பெற மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தவிர்த்து ஷர்துல் தாக்கூர் மற்றும் அன்ஷுல் கம்போஜ் இருவருக்கும் ஓய்வளிக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது.
பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப், ரிஷப் பண்ட்டுக்கு பதில் துருவ் ஜுரெல், அன்ஷுல் கம்போஜ்க்கு பதில் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூருக்கு பதில் கருண் நாயர் இடம்பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5வது போட்டியை வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் இந்திய அணி களம்புகுகிறது. கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவருக்கும் இது முதல் இங்கிலாந்து தொடர் என்பதால் இந்திய அணி வெற்றிக்காக நிச்சயம் போராடும் என தெரிகிறது.