மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை |வரலாறை வசப்படுத்தும் முயற்சியில் இரு அணிகள்... கோப்பை யாருக்கு ?
மகளிர் ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று நவி மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் மாலை 3 மணிக்கு மோதுகின்றன. இந்தியா, தென்னாப்பிரிக்கா என இரு அணிகளும் முதல்முறையாக உலக கோப்பையை முத்தமிட முயலும் என்பதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது.
நவம்பர் 2, 2025... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ள நாள் இது. இங்கிலாந்தை துவம்சம் செய்த லாரா வோல்வர்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த இந்திய அணியை எதிர்த்து விளையாடுகிறது. ரவுண்ட் ராபின் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 67 ரன்களுக்கு ஆல் அவுட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தாலும் அதிலிருந்து மீண்டெழுந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது தென் ஆப்பிரிக்கா. லீக் போட்டிகளில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்த பின்தான் தங்கள் லெவன் என்ன என்பதையே கண்டறிந்து அரை இறுதியில் விளையாடியது இந்திய அணி.
இப்படி இரண்டு அணிகளும் தங்களின் சிறந்த ஆட்டத்திறனை அரை இறுதியில் தான் வெளிப்படுத்தி உள்ளன. இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 20 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது, இருந்தாலும் உலக கோப்பைகளில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி 3 போட்டிகளிலும் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.
2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் இணைந்து அதிக ரன்கள் குவித்த முதல் இரண்டு அணிகளில் தென்னாப்ரிக்காவும், இந்தியாவும் உள்ளன. ஸ்மிருதி மந்தானா பிரதிகா ராவல் இணை இந்த ஆண்டு ஆயிரத்து 557 ரன்களும், டஸ்மின் பிரிட்ஸ் ,லாரா வோல்வார்ட் இணை ஆயிரத்து 120 ரன்களும் குவித்துள்ளனர். காயம் காரணமாக பிரதிகா ராவல் விலகியுள்ள நிலையில் தொடர்ந்து பார்ம் அவுட்டில் உள்ள சஃபாலி வர்மா எப்படி விளையாடுவார் என்ற கேள்விக்குறி இந்திய அணியிடம் உள்ளது.
பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி தங்களுடைய ஸ்பின்னர்களை நம்பியும், தென்னார்பிக்க அணி தங்கள் வேகப்பந்து வீச்சாளர்களையும் நம்பியும் உள்ளது. இந்த தொடரின் சிறந்த வேகப்பந்து வீச்சு குழுவாக தென்னாப்ரிக்க அணி உள்ளது. இந்திய அணியின் ஃபீல்டிங் மேம்பட வேண்டிய சூழலில் உள்ளது. இந்திய அணி முன் பல கேள்விகள் இருந்தாலும் நவி மும்பை மைதானத்தில் விளையாடுவது நம்பிக்கை ஊட்டுகிறது. இதே மைதானத்தில் இந்திய மகளிர் அணி நான்காவது போட்டியில் விளையாட உள்ளது.
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் இந்தியாவின் நீலப்படையும், முதன் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தென்னாப்பிரிக்க மகளிரும் நவி மும்பையில் புதிய வரலாறை நங்கூரமாக பாய்ச்ச உள்னர்.

