ICC தரவரிசை | வெறும் 4 புள்ளிதான்.. அபிஷேக்குடன் போட்டியிடும் இஷான்.. கீழிறங்கிய வருண்!
மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் அணி மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நிர்வாகம் வெளியிடும். அதன்படி, ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின், ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதேநேரத்தில், பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 2ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் அணி மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி நிர்வாகம் வெளியிடும். அதன்படி, ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பின், ஐசிசி புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மீண்டும் வென்றதைத் தொடர்ந்து, இந்திய அணியே இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அதேபோல், ஐசிசி வெளியிட்டுள்ள ஆடவர் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் அபிஷேக் சர்மாவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர், இந்தத் தொடரில் பல போட்டிகளில் சொதப்பியபோதும் இரண்டு அரைசதங்களை அடித்திருந்தார். அதிலும், இறுதிப்போட்டியில் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்து திறமையை நிரூபித்தார். இதன்மூலம் அவர் 875 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
அதேநேரத்தில், இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இஷான் கிஷன், மேலும் இரண்டு இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அவர் அபிஷேக் சர்மாவைவிட வெறும் 4 புள்ளிகளே பின்தங்கியுள்ளார்.
உலகக் கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 பந்துகளில் 39 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 54 ரன்களும் குவித்து இந்திய வெற்றிக்கு பங்காற்றியிருந்தார் இஷான் கிஷன். இந்தச் சிறப்பான ஆட்டமே அவரது தரவரிசை முன்னேற்றத்திற்குக் காரணம். இப்படி, இந்திய வீரர்கள் இருவர் பேட்டிங்கில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நிலையில், பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் இந்தியா மாற்றம் கண்டிருக்கிறது.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் பிடித்திருந்த முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்கு 740 புள்ளிகள் பெற்று சரிந்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஓர் இடம் முன்னேறி, 753 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 2ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா உள்ளார். இதே தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஷிவம் துபே 11ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

