T20 WC | சாகசம் நிகழ்த்திய இஷான் கிஷன்.. சாதனை படைத்த இந்தியா.. நிலைகுலைந்த நமீபியா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, நமீபியாவை வீழ்த்தி, இரண்டாவது வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் அடித்த சாதனை பட்டியலில் இணைந்தார். அதுபோல், இந்தியாவும் தொடர் சாதனை பட்டியலில் இணைந்தது.
20 நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று 18ஆவது போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நமீபியா டாஸ் ஜெயித்து இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. இதையடுத்து, வயிற்று வலி காரணமாக அபிஷேக் சர்மாவுக்குப் பதில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். காய்ச்சலில் இருந்து மீண்ட பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் சோபிக்கத் தவறிய இஷான் கிஷன் இந்த முறை, தொடக்கம் முதலே பட்டையைக் கிளப்பினார். அதிலும் 6வது ஓவரில், தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் பறக்கவிட்டார். தவிர, டி20 உலகக்கோப்பையில் 20 பந்துகளில் தனது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிவேக அரைசதம் அடித்த 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
முன்னதாக, யுவராஜ் சிங் (12 பந்துகள்), கே.எல்.ராகுல் (18), ரோகித் (19), யுவராஜ் சிங் (20) ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். இறுதியில் அவர் 24 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் மூலம் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இடையில் சஞ்சு சாம்சன் (22 ரன்கள்), திலக் வர்மா (25 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (12 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதேநேரத்தில், பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவும், சிவம் துபேவும் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை உயர்த்தினர். எனினும் ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் சிவம் துபேவும் 16 பந்துகளில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்குப் பின் களமிறங்கிய ரிங்கு சிங், அக்சர் படேல் ஆகியோர் மீண்டும் சோபிக்க இந்திய அணி, இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. டி20 உலகக்கோப்பையில் இந்தியா 200+ ரன்கள் குவிப்பது இது 4ஆவது முறையாகும். அதேபோல், டி20யில் அதிக முறை 200 ரன்கள் எடுத்த பட்டியலிலும் இந்திய அணியே முதலிடத்தில் உள்ளது. அது, இதுவரை 47 முறைக்கு மேல் 200 ரன்களை எடுத்துள்ளது. நமீபியா அணியில் கேப்டன் எராஸ்மஸ் 4 விக்கெட்க்ளை வீழ்த்தினார். பின்னர், 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஸ்டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 போட்டிகளை வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. தவிர, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

