WI vs IND | 16 பவுண்டரிகள்.. முதல் சர்வதேச சதமடித்த ஹர்லீன் தியோல்! IND 358 ரன்கள் குவிப்பு!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 211 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியானது குஜராத்தில் நடைபெற்றுவருகிறது.
முதல் சர்வதேச சதம் விளாசிய ஹர்லீன் தியோல்..
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா (53) மற்றும் பிரதிகா (76) இருவரும் அரைசதமடித்து அசத்தினர்.
அவர்களை தொடர்ந்து 3வது வீரராக களமிறங்கிய ஹர்லீன் தியோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 16 பவுண்டரிகளை விரட்டிய ஹர்லீன் 103 பந்தில் 115 ரன்கள் அடித்து மிரட்டினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பதிவுசெய்தார்.
உடன் ஜெமிமாவும் அவருடைய பங்கிற்கு அரைசதமடித்து அசத்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 358 ரன்களை குவித்து அசத்தியது. இது முந்தைய இந்திய அணியின் அதிகபட்ச ODI டோட்டலை சமன்செய்தது. இதற்கு முன் இந்திய அணி அதிகபட்சமாக அயர்லாந்துக்கு எதிராக 358 ரன்களை குவித்திருந்தது.
மிகப்பெரிய வெற்றி இலக்கை நோக்கி விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 36 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்களுடன் விளையாடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 88 ரன்களுடன் விளையாடிவருகிறார்.