“நான் தோனியிடம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பேசவில்லை” - ஹர்பஜன் சிங் சொன்ன ’ஷாக்’ தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிக வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கீழ் இந்திய அணியில் விளையாடிய இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் தோனியின் தலைமையின் கீழ் 2018 - 2020 ஆம் ஆண்டு வரை விளையாடியவர்.
நியூஸ் 18 நிறுவனத்திற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “நான் தோனியுடன் பேசுவதில்லை. நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது பேசியுள்ளேன்; மற்றபடி நாங்கள் பேசமாட்டோம். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எனக்கு எந்த காரணங்களும் இல்லை. ஒருவேளை தோனிக்கு இருக்கலாம். நான் சென்னை அணிக்காக விளையாடும்போது பேசியுள்ளோம். அதுவும் மைதானத்தில் மட்டுமே. அதன்பின்னர் அவர் என் அறைக்கு வரமாட்டார். நானும் அவரது அறைக்குச் செல்லமாட்டேன்.
அவருக்கு எதிராக கூற என்னிடம் எதுவும் இல்லை. அவருக்கு என்னிடம் கூற எதாவது இருந்தால், தாராளமாக என்னிடம் கூறலாம். அப்படி ஏதும் அவரிடம் இருந்தால், இந்நேரம் அவர் என்னிடம் கூறியிருப்பார். நான் அவரைத் தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை. என் அழைப்பை யார் எடுப்பார்களோ அவர்களை மட்டுமே நான் தொடர்புகொள்வேன். அதுமட்டுமின்றி எனக்கு அதற்கான நேரமும் இல்லை. உறவு என்பது எப்போதும் விட்டுக்கொடுத்து செல்வதுதான். நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கின்றேன் என்றால், நீங்கள் அந்த மரியாதையை எனக்கு மீண்டும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடைசியாக, 2015 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங்கும், தோனியும் தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒன்றாக விளையாடினர். 2015 ஆம் ஆண்டுக்குப் பின் ஹர்பஜன் சிங்கிற்கும், யுவராஜ் சிங்கிற்கும் அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் 2021 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.