இந்தியாவின் வரலாற்று வெற்றி.. ஆஸ்திரேலியா அணியில் பிளவு? கில்கிறிஸ்ட் வெளிப்படுத்திய தகவல்!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ராவின் 8 விக்கெட்டுகள், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில் 1-0 என இந்தியா பார்டர் கவாஸ்கர் தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் ஹசல்வுட் பேசியது அணியில் விரிசல் இருப்பதை உணர்த்துவதாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
நீங்கள் பேட்ஸ்மேன்கள் இடம்தான் கேட்கவேண்டும்..
முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்தபோது செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஜோஸ் ஹசல்வுட் இடம், நான்காம் நாளை ஆஸ்திரேலியா எப்படி அணுகும் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அந்தக் கேள்வியை நீங்கள் பேட்ஸ்மேன்கள் ஒருவரிடம்தான் கேட்க வேண்டும். நான் என்னுடைய விசயத்தில் தெளிவாக இருக்கிறேன், என்னை தயார் செய்துகொள்ள கொஞ்சம் பிசியோவிடம் சிகிச்சையைப் பெற நினைக்கிறேன். மேலும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக என்ன திட்டங்களைச் செய்யலாம் என்பதையே பெரும்பாலும் பார்க்கிறேன்” என்று பட்டும்படாமல் ஒரு பதிலை அளித்திருந்தார்.
டிரெஸ்ஸிங் ரூமில் விரிசல் இருப்பதாக தெரிகிறது..
ஹசல்வுட்டின் இந்த பதில் ஆஸ்திரேலியா அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் விரிசல் இருப்பதை உணர்த்துவதாக கில்கிறிஸ்ட் வெளிப்படுத்தினார்.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸில் டேவிட் வார்னர் மற்றும் மைக்கேல் வாகன் உடனான உரையாடலின் போது இதைப் பற்றிப் பேசிய கில்கிறிஸ்ட், “எனக்கு இது ஒரு பிளவுபட்ட டிரெஸ்ஸிங் ரூம் இருப்பதாக எடுத்துச் சொல்கிறது. உண்மையில் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் உறுதியாக கூறுவதற்கு இன்னும் தெரிந்து கொள்ளவேண்டும்" என்று கூறினார்.
கில்கிறிஸ்ட்டின் இந்த கேள்விக்கு டேவிட் வார்னர் “ஹசல்வுட் ஒரு மூத்த பந்துவீச்சாளராக அப்படி ஒரு பதிலை கூறியிருக்க கூடாது. அணியில் பிளவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என மறுத்து பேசினார்.
அதேநேரத்தில் மைக்கேல் வாகன், "இதற்கு முன் ஒரு ஆஸ்திரேலியா வீரர் இப்படியான பதிலை கூறியதில்லை" என்று சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளார்.
விரிசல் குறித்த கேள்விக்கு பாட் கம்மின்ஸ் பதில்..
அணியின் ஒற்றுமை குறித்த கேள்விக்கு பதிலளித்த பாட் கம்மின்ஸ், “நாங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறோம். ஒற்றுமையாக இருப்பதால்தான் நம்பர் 1 அணியாக இருக்க முடிகிறது. டிரெஸ்ஸிங் ரூமில் இருப்பது பெரிய குழுதான், இருப்பினும் நாங்கள் நன்றாக பழகுகிறோம், ஒருவருக்கு ஒருவர் சவாலாக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம் என உறுதியுடன் இருக்கிறோம்” என கூறியிருந்தார்.