10 வருடத்திற்கு பிறகு பஞ்சாப் அணியில் நிகழ்ந்த அதிசயம்.. 2025 ஐபிஎல் ஏலத்தின் டாப் 10 சம்பவங்கள்!
2025 ஐபிஎல் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றது. ஒவ்வொரு அணியும் தங்களுடைய பிரதான வீரர்களை ஏலம் எடுப்பதில் ஆர்வம் காட்டின.
எப்போதும் இல்லாத வகையில் இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி என முதல்முறையாக அதிகபட்ச தொகைக்கு இந்திய வீரர்கள் ஏலம் சென்றனர்.
இந்நிலையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் நடந்த டாப் 10 சம்பவங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
1. 182 வீரர்கள் மீது ரூ.639.15 கோடி செலவு
2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்ச தொகையாக ரூ.120 கோடி நிர்ணயிக்கப்பட்டது. அந்த ரூ.120 கோடிக்குள் 25 வீரர்களை எடுத்துக் கொள்ளலாம், 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. தக்கவைப்பு விதிமுறையில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் மற்றும் 2 அன்கேப் இந்திய வீரர்கள் இடம்பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
அந்தவகையில் ஏலத்திற்கு முன்பாக 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை ரூ. 558.5 கோடிக்கு தக்கவைத்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் 182 வீரர்கள் மீது ரூ.639.15 கோடி செலவு செய்துள்ளன ஐபிஎல் அணிகள்.
2. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஏலம்
ஐபிஎல் ஏல வரலாற்றில் 2025 ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரர் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக 3 இந்திய வீரர்கள் 20 கோடிக்கு மேல் வாங்கப்பட்டது இதுவே முதல்முறை.
இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் அதிகபட்சமாக ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி என ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
3. மிகக்குறைந்த வயது வீரருக்கு 1 கோடி ஏலம்
முதல்முறையாக மிகக்குறைந்த வயது வீரர் 1 கோடிக்கு மேல் வாங்கப்பட்டார். பீகாரை சேர்ந்த 13 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதமடித்ததன் மூலம் பல சாதனைகளை படைத்திருந்தார். ஒரு வருடத்தில் வெவ்வேறு தொடர்களில் விளையாடி 13 வயதிற்குள் 49 சதங்களையும் விளாசியுள்ளார்.
4. லட்சத்திலிருந்து 10 கோடிக்கு சென்ற 2 வீரர்கள்!
2025 ஐபிஎல் ஏலத்தில் முதல்முறையாக லட்சத்தில் சம்பளம் வாங்கிய 4 வீரர்கள் நேரடியாக ஒரு கோடிக்கு மேல் சென்றுள்ளனர். அதிலும் இரண்டு வீரர்கள் நேரடியாக லட்சத்திலிருந்து 10 கோடி வரை சென்று அசத்தியுள்ளனர்.
- ஜிதேஷ் சர்மா - ஆர்சிபி - ரூ. 11 கோடி (முன் 20 லட்சம்)
- நூர் அகமது - சிஎஸ்கே - ரூ.10 கோடி (முன் 30 லட்சம்)
- குர்ஜப்னீத் சிங் - சிஎஸ்கே - ரூ.2.20 கோடி (அடிப்படை விலை 30 லட்சம்)
- வைபவ் சூர்யவன்ஷி - ராஜஸ்தான் - ரூ.1.10 கோடி (முதல் ஐபிஎல்)
5. 14 வருட ஐபிஎல் வாழ்க்கையில் முதல்முறை 10 கோடி
ஸ்விங் கிங் என அழைக்கப்படும் புவனேஷ்வர் குமார் 2011-ல் ஐபிஎல்லில் அறிமுக போட்டியில் விளையாடினார். அங்கிருந்து 176 போட்டிகளில் விளையாடி 181 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், பவர்பிளேவில் ஸ்விங் செய்வதிலும் டெத் ஓவர்களில் யார்க்கர் போடுவதிலும் சிறப்பாக செயல்படக்கூடிய பவுலர்.
ஆனாலும் அவருடைய திறமைக்கான தொகையை இதுவரை அவர் பெற்றதில்லை, வெளிநாடு வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லாம் 25கோடிக்கு சென்ற நிலையில் முதல்முறையாக புவனேஷ்வர் குமார் 10 கோடிக்கு மேல் ஏலம் சென்றுள்ளார். 2025 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி புவனேஷ் குமாரை 10.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்குமுன் அவருடைய அதிகபட்சமாக 8.50 கோடியே இருந்தது.
6. முதல்முறையாக டாப் 5 வீரர்கள் அனைவரும் இந்தியர்கள்
2025 ஐபில் ஏலத்தில் முதல்முறையாக டாப் 5 அதிகபட்ச ஏலத்தொகைக்கு சென்ற வீரர்கள் அனைவரும் இந்தியர்களாக இருந்தனர்.
ரிஷப் பண்ட் அதிகபட்சமாக ரூ.27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி சென்ற நிலையில், அடுத்த இரண்டு இடத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரும் 18 கோடியை தட்டிச்சென்றனர்.
7. முதல்முறையாக CSK-ல் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ஆப்கானிஸ்தான் வீரரை தங்களுடைய அணியில் இணைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் ஸ்பின்னரான நூர் அகமதுவை 5 கோடிக்கு சிஎஸ்கே சீல் செய்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை தக்கவைக்க RTM பயன்படுத்தியது.
ஆனால் அவரை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக 5 கோடியிலிருந்து 10 கோடிக்கு பிட் செய்த சிஎஸ்கே அணியில் எடுத்தது. நூர் அகமது சிஎஸ்கே அணியில் விளையாடப்போகும் முதல் ஆப்கானிஸ்தான் வீரராக மாறினார்.
8. 10 வருடத்திற்கு பின் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நடந்த விசயம்
10 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் கோப்பை வென்ற ஒரு கேப்டன் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தவிருக்கிறார். 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர். பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தவிருக்கிறார்.
ஒருமுறை கூட கோப்பை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணியில், கடந்த 2013 ஐபிஎல்லில் கோப்பை வென்ற கேப்டனான கில்கிறிஸ்ட் வழிநடத்தினார். அதற்குபிறகு 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பை வென்ற ஒரு கேப்டன் பஞ்சாப் அணியை வழிநடத்தவிருக்கிறார்.
9. முதல் முறையாக அணி மாறிய கோப்பை வென்ற கேப்டன்
ஐபிஎல்லில் முதல்முறையாக முந்தைய சீசனில் ஒரு அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன், அடுத்த சீசனில் வேறு அணிக்கு சென்றுள்ளார்.
2024 ஐபிஎல்லில் கொல்கத்தா அணியை கோப்பைக்கு வழிநடத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார்.
10. அன்கேப்டு விதிமுறை மூலம் ஏலம்போன மூத்தவீரர்கள்
2025 ஐபிஎல் ஏலம் அறிவிக்கப்பட்ட போது 5 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடாத வீரர்கள் அன்கேப்டு வீரராக ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் 2025 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற விஜய் ஷங்கர், இஷாந்த் சர்மா முதலிய வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். விஜய் ஷங்கர் சிஎஸ்கே அணிக்கும், இஷாந்த் சர்மா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்றுள்ளனர்.