பும்ரா vs பிராட்மேன் மோதியிருந்தால்.. அவரின் சராசரி 99-ஐ விட குறைந்திருக்கும்! - ஆடம் கில்கிறிஸ்ட்
2024 டிசம்பரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விதிவிலக்கான டெஸ்ட் தொடரை கொண்டிருந்தார். இதுபோலான ஒரு பந்துவீச்சை இதற்கு முன்பு பார்க்கவில்லை என ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பல முன்னாள் ஜாம்பவான்கள் பும்ராவை கண்டு பிரமித்தனர்.
பும்ராவின் அசாத்தியமான பந்துவீச்சானது அவருக்கு ஐசிசியின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது, இந்த விருதை பாட் கம்மின்ஸ் மற்றும் டேன் பேட்டர்சன் ஆகியோருடன் போட்டிப்போட்ட பிறகு பும்ரா தட்டிப்பறித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில், பும்ரா 14.22 என்ற வியக்கத்தக்க பந்துவீச்சு சராசரியுடன் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவை தனியொரு ஆளாக தாங்கிப்பிடித்த பும்ரா இந்த தொடரின் முடிவில் 9 இன்னிங்ஸ்களில் 13.06 சராசரியில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலர் என்ற வரலாற்றை படைத்த பும்ரா, கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஜோயல் கார்னர், மால்கோம் மார்சல் முதலிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி 200 விக்கெட்டுகளை 20-க்கும் குறைவான சராசரியில் எடுத்த முதல் பவுலராகவும் உலக சாதனை படைத்து கிரிக்கெட் உலகையே பிரமிக்க வைத்தார்.
பும்ரா vs பிராட்மேன் மோதியிருந்தால் என்னவாகியிருக்கும்?
எக்காலத்திற்கும் சிறந்த பந்துவீச்சை கொண்டிருந்த ஜஸ்பிரித் பும்ராவை புகழ்ந்திருக்கும் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், பிராட்மேன் உச்சபட்ச பேட்டிங் ஃபார்மில் இருந்தபோது பும்ராவை எதிர்கொண்டிருந்தால் பும்ரா அவரின் பந்தால் பிராட்மேனை தோற்கடித்திருப்பார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பிராட்மேன் உடன் ஒப்பிட்டு பும்ராவை பாராட்டியிருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட், “பும்ராவை நான் ரேட்டிங் செய்ய மாட்டேன். உலக விளையாட்டில் அவர் எந்தளவுக்கு திறமையானவர் என்பதை சொல்வதற்கு எந்த நம்பர்களும் இல்லை. பிராட் மேன் உச்சத்தில் இருந்த காலத்தில் பும்ரா பந்துவீசி இருந்தால், பிராட்மேனை அவருடைய பந்துவீச்சால் தொந்தரவு செய்து இருப்பார். பிராட்மேனின் பேட்டிங் சராசரி 99 என்று இருந்திருக்காது. அவர் அதை இன்னும் குறைத்து இருப்பார்” என்று கில்கிறிஸ்ட் கிளப் ப்ரேரி ஃபயர் போட்காஸ்டில் கூறினார்.