”உனக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பேன்..” அபிமன்யுவிற்கு கம்பீர் கொடுத்த உறுதி!
இந்தியாவின் தொடக்க வீரர் பேட்ஸ்மேனான அபிமன்யு ஈஸ்வரன், 2021 முதல் இந்திய அணியுடன் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கான வாய்ப்புக்கான கதவு மட்டும் இன்னும் திறக்காமலேயே இருந்துவருகிறது.
அவருக்கு பின்னர் வந்த சர்பராஸ் கான், துருவ் ஜுரெல் போன்ற வீரர்கள் டெஸ்ட் கேப்பை பெற்றுவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக அபிமன்யு பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இனி எதிர்வரும் டெஸ்ட் தொடர்களில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்குவதை கவுதம் கம்பீர் உறுதியளித்திருப்பதாக அவருடைய தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உனக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும்..
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என என் மகன் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு இருந்தான், ஆனால் வாய்ப்பு கிடைக்காதபோது கலக்கமடைந்தான் என்று அபிமன்யுவின் தந்தை கூறியுள்ளார்.
விக்கி லால்வானியுடன் தனது யூடியூப் சேனலில் பேசிய ஈஸ்வரனின் தந்தை பரமேஸ்வரன், ”ஐந்தாவது டெஸ்டுக்கு தேர்வு செய்யப்படாததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார், அந்த அழைப்பை அவர் எதிர்பார்த்திருந்தார். வாய்ப்பு கிடைக்காததால் கோபமாக இருந்தார். நான் அவருக்கு அழைத்தபோது, 'அப்பா, எனக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லை' என்று கலக்கமாக பேசினார்.
நான் அவரிடம், 'மகனே, நீ உன் கனவை நனவாக்கிவிட்டாய்' என்று சொன்னேன். அவர், 'எனக்குப் புரிகிறது. நான் 23 வருடங்களாக என் கனவை வாழ்ந்து வருகிறேன், ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படாமல் இருப்பது அதை உடைத்துவிடாது” என்று பதிலளித்ததாக அபிமன்யுவின் தந்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போதைக்கு என் மகன் குறித்த மகிழ்ச்சியான செய்தி இதுதான் என்று வெளிப்படுத்தியிருக்கும் அவர், “கௌதம் கம்பீர், என் மகனிடம் பேசியபோது, 'பார், நீ சரியான விஷயங்களைச் செய்கிறாய். உனக்கான வாய்ப்பு நிச்சயம் உனக்கு கிடைக்கும். உனக்கான முறையில் நீண்ட வாய்ப்பு கிடைக்கும். 'ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்குப் பிறகு உன்னை வெளியே தள்ளுபவன் நான் அல்ல. நான் உனக்கு ஒரு நீண்ட கயிற்றைக் கொடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார். முழு பயிற்சிக் குழுவும் அவனுக்கு அவனது தகுதியைப் பெற வாய்ப்பளிப்பதாக உறுதியளித்துள்ளது. அவன் நீண்ட ஓட்டத்தைப் பெறுவான். அதுதான் நான் அவனைப்பற்றி சொல்லக்கூடிய சிறந்தது. என் மகன் 4 ஆண்டுகளாகக் காத்திருக்கிறான். அவன் 23 வருட கடின உழைப்பில் ஈடுபட்டுள்ளான்" என்று மேலும் கூறினார்.