முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா மரணம்! கல்லீரல் பிரச்னையால் 40 வயதில் காலமானார்!
ராஜஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரோஹித் ஷர்மா மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 40. வலது கை தொடக்க ஆட்டக்காரரான ஷர்மா கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகக் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 2ம் தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். 40 வயதில் ஏற்பட்ட அவருடைய மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ரோஹித் ஷர்மா?
ரோஹித் ஷர்மா 2004-ல் சர்வீசஸ் அணிக்கு எதிராக முதல்தர போட்டியில் அறிமுகமானார். 2007-ம் ஆண்டு ஜெய்ப்பூருக்கு எதிராக டி20 அரங்கிலும் தனது பட்டியல் ஏ அறிமுகத்தைத் தொடங்கினார். தன் திறமையான பேட்டிங்கின் மூலம், 7 முதல் தரப் போட்டிகளில் பங்கேற்று 166 ரன்கள் குவித்தார். மேலும் அதிகபட்ச ஸ்கோருடன் 36 ரன்கள் எடுத்திருந்தார். நான்கு டி20 போட்டிகளில், அவர் தனது லெக்ஸ்பின் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவரின் கிரிக்கெட் பயணம் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நீடித்தது. அதன்பின் அவர் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று RS கிரிக்கெட் அகாடமியை நிறுவினார். இதில் அவர் பயிற்சியாளராக கிரிக்கெட் ஆர்வமுள்ள அனைத்து வீரர்களுக்கும் தனது அறிவை வழங்கி வந்தார்.