ஈராக்கிற்கு 40 ஆண்டுகள்.. காங்கோவிற்கு 52 ஆண்டுகள்.. FIFA WC-இல் வரலாற்றை மாற்றிய குட்டி நாடுகள்!
ஈரானுக்குப் பதிலாக, ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் களம் கண்ட ஈராக் அணியானது, பொலிவியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், உலகக் கோப்பை தொடருக்கும் தகுதிபெற்று அசத்தியது.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான பிளேஆஃப் இறுதிப் போட்டியில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில், 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி, போஸ்னியா அண்ட் ஹெர்செகோவினாவை எதிர்கொண்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில், போஸ்னியா அண்ட் ஹெர்சகோவினா வெற்றிபெற, இத்தாலி உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதன்மூலம் போஸ்னியா தனது இரண்டாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு, 2014-க்குப் பிறகு முதல்முறையாக, முன்னேறியது.
அதேநேரத்தில் இத்தாலி, தற்போது தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பைகளை தவறவிட்ட முதல் முன்னாள் சாம்பியன் என்ற மோசமான வரலாற்றைப் பதித்துள்ளது. முன்னதாக அந்த அணி, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பைகளிலும் வெளியேறியிருந்தது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஈரானுக்குப் பதிலாக, ஆசிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் களம் கண்ட ஈராக் அணியானது, பொலிவியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், உலகக் கோப்பை தொடருக்கும் தகுதிபெற்று அசத்தியது. இதன்மூலம் 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் ஈராக் அணி ஃபிஃபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஈராக் அணி சார்பில் 10ஆவது நிமிடத்தில் அலி அல்-ஹமாதியும், 53ஆவது நிமிடத்தில் அய்மன் ஹுசைனும் கோல் அடித்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் கடைசி அணியாக இராக் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. முன்னதாக, ஈரான் கால்பந்து அணி அமெரிக்காவுக்குச் சென்று விளையாட மறுத்தது. இதையடுத்து ஈராக் தகுதிபெற்றது. எனினும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் ஈராக், மெக்சிகோவுக்குச் சென்று சாதித்திருப்பது உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.
அதேபோல், காங்கோ அணியும் 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது. கண்டங்களுக்கு இடையேயான தகுதிச்சுற்றுப் போட்டியில், கூடுதல் நேரத்தில், அதாவது 100ஆவது நிமிடத்தில் ஆக்செல் டுவான்செபே அடித்த ஒரே கோல், ஜமைக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காங்கோவை உலகக் கோப்பைக்குத் தகுதிபெற வைத்தது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ, 1974ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளுக்குப் பிறகு முதல்முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளது.
அப்போது அந்த அணி, ’ஜைர்’ என்ற பெயரில் போட்டியிட்டு, ஸ்காட்லாந்து, யூகோஸ்லாவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிடம் தோல்வியடைந்திருந்தது. கால்பந்து உலகக் கோப்பைக்கு 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக காங்கோ அணி தேர்வானதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் நேற்று (ஏப்.1) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், ’ரெக்கே பாய்ஸ்’ என்று அழைக்கப்படும் ஜமைக்கா அணி, இரண்டாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பைத் தவறவிட்டது. உலகின் மிகப்பெரிய கால்பந்துப் போட்டியான இதில், அவர்கள் 1998-ஆம் ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்றுள்ளனர். பிளேஆஃப் இறுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கான 48 அணிகளின் இறுதிப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

