பிசிசிஐ புதிய தலைவராகும் முன்னாள் சிஎஸ்கே வீரர்.. யார் இந்த மிதுன் மன்ஹால்?
உள்நாட்டு கிரிக்கெட்டின் முன்னணி வீரரான மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார். அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது. இந்தத் தேர்தல் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது. அப்போது, உள்நாட்டு கிரிக்கெட்டின் முன்னணி வீரரான மிதுன் மன்ஹாஸ், பிசிசிஐ தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, இந்தத் தேர்வுக்கான பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரகுராம் பட் (கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்) மற்றும் முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் ஹர்பஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்ஹாஸைச் சுற்றி அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் விவாதிக்கப்பட்டே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
46 வயதாகும் மன்ஹாஸ் ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர். 157 ரஞ்சிப் போட்டிகளிலும் 44 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடினார். ரஞ்சி போட்டிகளில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 2022இல் பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ரோஜர் பின்னியின் பதவிக் காலம் நிறைவடைந்தது.