முதல் ODI| பதிலடி கொடுப்பார்களா கோலி-ரோகித்..? வலுவான அணியை அறிவித்த இங்கிலாந்து!
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் 0-4 என ஒயிட்வாஷ் அடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா நாடு திரும்பிய நிலையில், சுப்மன் கில் தலைமையில் 3 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. முதல் ODIக்கு ஜேக்கப் பெத்தல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், 200வது ODI ஆடும் பட்லர், அடில் ரஷித், ஆர்ச்சர், டங் உள்ளிட்ட வலுவான அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடிவருகிறது.
5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், 4 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இந்தியாவை 0-4 என ஒயிட்வாஷ் செய்தது. ஒரு போட்டி மழையால் நடக்காமல் போனது. உலக சாம்பியனாக இங்கிலாந்துக்கு சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி படுதோல்வியை சந்தித்து திரும்பியுள்ளது.
இந்நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது. நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவிருக்கும் முதல் போட்டியில் 2 அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் பிளேயிங் 11-ல் நல்ல ஃபார்மில் இருந்துவரும் ஜேக்கப் பெத்தல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். பட்லர், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் என டாப் பேட்டர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். பட்லர் தன்னுடைய 200வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்காக களமிறங்க உள்ளார்.
அதேபோல அடில் ரசீத் லீடிங் ஸ்பின்னராக களமிறங்குகிறார். அவருக்கு துணையாக வில் ஜாக்ஸ், லியாம் டாசன் இருவரும் இருக்கின்றனர். இரண்டு வேக துப்பாக்கிகளாக ஆர்ச்சர் மற்றும் டங் இருவரும் அசத்த காத்திருக்கின்றனர். மொத்தத்தில் வலுவான அணியை இங்கிலாந்து களமிறக்கியுள்ளது.
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒவ்வொரு ஒருநாள் தொடரும் முக்கியம் என்பதால், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுபோக டி20 தொடரில் வாங்கிய அடிக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பதிலடி கொடுப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து அணி
ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கர்ரன், வில் ஜாக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், ஜோஷ் டங், அடில் ரஷித்.

